தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன்

Central Minister

தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன்

சமீபத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனால் வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சூழ்ந்த கனமழையால் பொருட்சேதம் மட்டுமில்லாது உயிர் சேதமும் அதிக அளவில் நடந்துவிட்டது. 

மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள் மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஆங்காங்கே மருத்துவமுகாம்களை அமைத்து நோய் எதுவும் பரவிவிடாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு நிர்வாகம் மட்டுமல்லாது ஈஷா போன்ற தன்னார்வ அமைப்புகளும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. 

மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சிறிதாக முட்டல், மோதல் ஏற்பட்டிருக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டதும் உடனே மாநில நிர்வாகம் செயல்பட முடியாமல் திகைத்து நின்றது. முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இருந்ததுதான் அதுக்கு காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மறுக்கும் மாநில நிர்வாகம், விரைந்து செயல்படுவதுடன், மத்திய அரசு நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்த உங்க அப்பன் வீட்டு பணமா? என்கிற கேள்வி பேசும் பொருளானது. அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், இன்னும் வளர நினைக்கும் அரசியல்வாதி இப்படியெல்லாம் பேசக் கூடாது என்றவர், இதுவரை வழங்கிய நிவாரண தொகையினை பட்டியளிட்டார்.   

மழை வெள்ளத்தில் மக்கள் மிதந்து கொண்டிருக்கும்போது இவர்களின் கேள்வி - பதில் அரசியல் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை என்றாலும் மக்களுக்கு விளக்கும்படி அமைந்திருந்தது. மாநில அரசு செய்யத்தவறியதை மக்கள் பேசும்படியாக இருந்துவிட கூடாது என்று மத்திய அரசு மீது குற்றம் சொல்லி விவகாரத்தை திசை திருப்புகிறார் என்கின்றனர் பாஜகவினர்.        

இந்தநிலையில் இன்று(26.12.2023)தூத்துக்குடி மாவட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். அவருடன் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வந்திருந்தனர். பாதிக்கப்பட்ட அந்தோணியார்புரம், கோரம்பள்ளம்,முறப்பநாடு,ஏரல் மற்றும் மாநகராட்சியில் உள்ள குறிஞ்சிநகர் உள்பட 8 இடங்களில் உள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலாசீதாராமன் பார்வைட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், கார் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.