ஆதியோகி முன் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி காசியை சேர்ந்த 7 உபாசகர்கள் நிகழ்த்தினர்

isha

ஆதியோகி முன் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி காசியை சேர்ந்த 7 உபாசகர்கள் நிகழ்த்தினர்

ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.22 ) சிறப்பாக நடைபெற்றது.

இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. ஈஷாவில் இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளான நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவக்கினர்.

அதனைத் தொடர்ந்து  தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது. இந்தாண்டு சயன ஆரத்தியை காசி உபாசகர்களுடன் முதன் முறையாக ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் முழுநேர தன்னார்வலர்களும் சேர்ந்து நடத்தினர். சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 

அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.