திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி பெருந்திருவிழா: கொடிப்பட்டம் வீதி உலா கோலாகலம்
Thiruchendur Murugan
திருச்செந்தூர், மாசி-9(21.02.2026)
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருந்திருவிழா இன்று (21ம் தேதி) அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற கொடிப்பட்டம் வீதி உலா பக்தர்களின் கோலாகல வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை வழிபாடுகள்
திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் மகர லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் பத்து நாள் மாசி பெருந்திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
கொடிப்பட்டம் வீதி உலா
திருவிழாவை முன்னிட்டு 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டம், முதல் படி கையாட்சி படிச்செப்பு ஸ்தலத்தார் அரிகரசுப் பிரமணியன் அய்யர் யானை மீது கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து கோயிலில் சேர்த்தார்.
இந்த நிகழ்வில் கோயில் மூர்த்தி, பேஷ்கார் ரமேஷ், கண்காணிப்பாளர் ராமதர், 14 ஊர் செங்குந்தர் விருத்திசங்க நாட்டுத் தலைவர் பழனிச்சாமி, சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மாரிமுத்து, திரிசுதந்திர கைங்கர்ய சபைத் தலைவர் ஆனந்த், ஸ்தலஸ்தார் சபைத் தலைவர் வீரபாகு மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் வீதியெங்கும் திரண்டு வழிபட்டனர்.
தேரோட்டம் – விழாவின் சிகரம்
வரும் மார்ச் 2ம் தேதி (பத்தாம் திருநாள்) திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் மீன லக்கனத்தில் விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள உள்ளனர்.
கூடுதல் ஏற்பாடுகள்
திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ உதவி, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சீரான தரிசனம் பெற வரிசை கட்டுப்பாடு மற்றும் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் நகரம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவுகிறது.
nadunilai.com