தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் கர்மவீரர் காமராஜர்

k.kamarajar

தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் கர்மவீரர் காமராஜர்

சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதனை தொலை நோக்கு சிந்தனையோடு செய்வது ஒரு ரகம். அந்த வாய்ப்பை தனக்காகவும், தன்னை சேர்ந்தவர்களுக்காகவும் சாதகமாக பயன்படுத்த யோசிப்பது இன்னொரு ரகம். அதுபோல் மக்கள் ஆதரவை பெறுவதற்காக மட்டுமே குறுகிய பார்வையோடு யோசிப்பது மற்றொரு ரகம். இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர் ஐயா காமராஜர். தன்னுடைய வாழ்நாளை நாட்டுக்காக அர்ப்பணிப்பதே பிறந்ததின் பலன் என்று கருதி வாழ்ந்தவர். உண்மையாகவே வாழ்ந்து காட்டியவர். 

எதிலும் அவர் உண்மையாக இருந்ததினால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ஆகவும், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து பணியாற்றினார். பதவியை பயன்படுத்தி, இளமையில் தனக்கு கிடைக்காத கல்வியை நாட்டு மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தார். கல்வி பெறாதவர்களின் நிலையை அவர் நேரடியாக அனுபவித்தின் விளைவு அது எனலாம். அதுபோல் சாதாரண நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டும் என்று அவர் நேரடியாகவே அலைந்து திரிந்து அணைகள் பலவற்றை கட்டி உணவை உற்பத்தி செய்தார்.  வாழ்நாள் முழுவதும் உண்மையாக, நேர்மையாக வாழ்ந்து அடுத்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்திருப்பவர். மகாபாரம்,ராமாயணம் சொல்லும் உத்தமத்தோடு உறுதியாக கடைபிடித்தவர். தாம் கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் தொலை நோக்கு சிந்தனை உடையது. ஓட்டு வாங்குவதற்காக என்று எந்த ஒரு திட்டத்தையும் அவர் யோசிக்கவில்லை. 

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியவர், பாகுபாடில்லாமல் அனைத்து மாணவர்களையும் ஒரே மாதிரி பார்க்கும் சீறுடை திட்டத்தை அறிமுகம்செய்தவர். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர். பல தொழிற்சாலைகளை கொண்டு வந்து தமிழகத்தை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர். இதையெல்லாம் சொல்லி ஓட்டு கேட்காதவர். அவரை தவறவிட்ட தமிழகம் இப்போது விளம்பர அரசியல்களுக்குள் கிடந்த மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது.