தூத்துக்குடியில் பழிக்கு பழியாக லாரி செட் உரிமையாளர் சக்திவேல் படுகொலை
thoothukudi murder
தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல்(53). தூத்துக்குடி - மதுரை ரோட்டில் சங்கரபேரி விலக்கில் லாரி செட் வைத்து நடத்தி வந்தார். இன்று(16.08.2023)மாலை அவர் லாரி செட்டில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அப்போது அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். நிலை குலைந்த சக்திவேலை சூழ்ந்து கொண்ட இந்த கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சிப்காட் போலீஸார், சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பிக்கள் சத்தியராஜ், சதீஷ் உள்பட போலீஸார் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கடந்த 28.1.2023 அன்று நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
கேடிசி நகரை சேர்ந்த பழனி என்பவரது மகன் கருப்பசாமி(வயது 27). தெற்கு சங்கரபேரியில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த 28.1.2023 அன்று இரவு தனது நண்பரான உத்தண்டு முருகன் என்பவருடன் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமி மற்றும் அவரது நண்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடனே கருப்பசாமியும் அங்கிருந்த அரிவாளால் அந்த கும்பலை திருப்பி வெட்டினார்.
சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உத்தண்டு முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில் 9 பேர் கும்பலில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கொலை செய்யப்பட் கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த உத்தண்டு முருகனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சம்பத் ஆகியோரும் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை வெட்டிக்கொலை செய்த கும்பலை தேடினர். அப்போது தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேர் சிகிச்சை பெறுவதை அறிந்த அவர்கள் அங்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் சங்கரபேரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன்கள் உத்தண்டு(31) மற்றும் கருப்பசாமி(26), அங்குசாமி மகன் கல்லூரி மாணவரான மற்றொரு உத்தண்டு(20) என்பதும், இவர்களுக்கு அந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 2017-ம் ஆண்டு அங்குசாமி என்பவரது கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட கருப்பசாமிக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால் அங்குசாமியின் மகன் உத்தண்டுவின் தூண்டுதலில் பழிக்குப்பழியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சிலர் கைதாகி ஜாமினில் வெளியில் வந்தனர்.
கருப்பசாமி கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டு வந்த லாரி செட் உரிமையாளர் சக்திவேல்(53). இன்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வழக்குபதிவு செய்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பழிக்கு பழியாக நடந்து வரும் கொலை சம்பவங்களினால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.