தொழில் செய்ய விரும்புவோருக்கு கடனுதவி செய்ய தயார் - தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
NEEDS NEWS
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2024-25-ம் ஆண்டிற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.305 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி, எழிலார்ந்த தொழில்கள் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்கிட ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2012-13-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் தொடங்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பரிந்துரைக்கப்படுகிறது. கல்வித்தகுதியாக +2 தேர்ச்சி, பட்டப்படிப்பு/ பட்டயபடிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறவிரும்புவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21- க்கு மேல் 45 வரையும், மகளிர், ஆதித்திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது 21-க்கு மேல் 55 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவிகிதம், சிறப்பு பிரிவினர் 5 சதவிகிதம் தங்கள் பங்காக வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அரசு மானியமும் (அதிகபட்சமாக 75 இலட்சம் வரை) தவணை தவறாமல் கடன் திரும்ப செலுத்தும் தொழில்முனைவோருக்கு 3மூ பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். தொழிற்கூடத்திற்கு தேவையான கட்டிடங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் அரிசிஆலை, மா இழைப்பகம், எண்ணெய் உற்பத்தி, லேத் இயந்திரம் அமைத்தல், அட்டைப்பெட்டி தயாரித்தல், உப்பு அரைத்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிசியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளைஆஸ் பிரிக்ஸ், பேவர் பிளாக், ஆயத்த ஆடை தயார் செய்தல், ஸ்டீல் மர கட்டில், அலமாரி, கதவு, சன்னல் தயார் செய்தல், செறிவூட்டப்பட்ட கார்பன் தயார் செய்தல், தேங்காய் பவுடர் தயார் செய்தல், மீன் எண்ணெய், மீன் வலை தயார் செய்தல், முந்திரி பருப்பு பதப்படுத்துதல், பழக்கூழ் தயார் செய்தல், கலவை இயந்திரம், பொக்லைன் வாங்குதல் போன்ற தொழில்கள் துவங்க வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற்று நீங்களும் தொழில் முனைவோராக மாறி பிறருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வாய்ப்பை பெறும் அரும்பணி ஆற்றிட தமிழக அரசு அழைக்கிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்விச்சான்று நகல், ஜாதிசான்று நகல், புகைப்படம், குடும்ப அட்டை, விலைப்புள்ளி, கட்டிடம் தேவைப்படின் சாட்டடு இன்ஜினியரிடம் பெறப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ், தொழில் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் நேரடியாக மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்பவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.