நேற்று நள்ளிரவில் அரசு பஸ்,ஓட்டுநர், நடத்துனர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு இன்று மாலை வரை எப்.ஐ.ஆர் போடவில்லை

Thoothukudi Police

நேற்று நள்ளிரவில் அரசு பஸ்,ஓட்டுநர், நடத்துனர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு இன்று மாலை வரை எப்.ஐ.ஆர் போடவில்லை

தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் செட்டிக்குளம் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து நேற்று(7.9.2023)இரவு 10 மணிக்கு கிளம்பியது. அதனை நாகர்கோவில் கே.என்.நகரை சேர்ந்த செல்லப்பா மகன் சணல்குமார்(வயது50) ஓட்டினார். நாகர்கோவில், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தனசேகர்(50) நடத்துனராக இருந்தார். 

இந்த பேருந்து தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகைகுளத்தை தாண்டி சென்றபோது பேருந்தை வழிமறிந்த வாலிபர்கள், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததுடன், பஸ்ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கண்மூடித்தனமாக தாக்கியதோடு மிரட்டிவிட்டும் சென்றனராம். நிலைகுலைந்து படுகாயமடைந்த ஓட்டுநரையும், நடத்துனரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சையில் உள்ள ஓட்டுனர் சணல்குமார், ‘’தூத்துக்குடியில் இரவு 10 மணிக்கு பஸ்ஸை எடுத்தேன். புதுக்கோட்டை யூனியன் ஆபீஸ் ஸ்டாப்பில் 2 பேர் இறங்கினர். அப்பகுதியில் சில ஒருவரை அழைத்து வந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டனர். அரை கி.மீ தூரத்தில் உள்ள டோல் கேட்டில் இரண்டுபேர் இறங்கினர். அதன் பிறகு பஸ்ஸை நெல்லை நோக்கி ஓட்டினேன். வாகைகுளத்தை தாண்டி சத்தியா ரெஸ்டாரண்ட் பக்கத்தில் போகும்போது பைக்குகளில் வந்த சில பையன்மார்(சிறுவர்கள்). பஸ்ஸில் திடீரென ஏறி என்னையும், கண்டெக்டரையும் கடுமையாக தாக்கினர். பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். கொலை மிரட்டல்விட்டு சென்றனர். அதுவரை இவர்கள் எதற்காக நம்மை தாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியாது. அதன்பின்னர் தான் நடத்துனர் சொன்னார். யூனியன் ஆபிசை தாண்டியது சிலர் சேர்ந்து ஏற்றிவிட்ட சிறுவன், படிக்கட்டில் இருந்து மேலே ஏறவில்லை என்றும் அவர் சொல்லி பார்த்தும் அவன் கேட்கவில்லை என்றும் எதோ போதையில் இருப்பதுபோல் இருந்தது என்றும் டோல்கெட்டில் இரண்டுபேர் இறங்கும்போது அந்த பையனும் இறங்கிவிட்டார் போல. அதுக்காகத்தான் இந்த பையன்மார் வந்து இப்படி தாக்கிவிட்டது தெரிகிறது. 

இந்த சம்பவங்களை பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அச்சமும் அழுகையும் நிறைந்து. 

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று நள்ளிரவு நடந்த சம்பவத்துக்கு இன்று மாலை வரை வழக்குபதிவு செய்யவில்லை என்று வேதனை கொள்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர். சிறார் என்று செண்டிமெண்ட் பேசும் போலீஸ், இரு தரப்பிலும் நீண்ட நேர பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறதே தவிர இதுவரை எப்.ஐ.ஆர் போடவில்லை. நிச்சயமாக போலீசை கண்டித்து நோட்டீஸ் அடிக்க வேண்டிய நிலை வரும் போல என்று கோபத்தில் காத்திருக்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.