திருவைகுண்டம், சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து 578 நிறுத்தம்.!

Tnstc News

திருவைகுண்டம், சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து 578 நிறுத்தம்.!

திருவைகுண்டம், சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி மற்றும் இருக்கன்குடி இடையே இயக்கப்படும் தடம் எண் 578, 147சி, 52பி ஆகிய அரசு பேருந்துகளை தொடர்ந்து முறையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

கல்வி, தொழில், அரசு அலுவலகம், விவசாயம் மற்றும் சந்தையை மையமாக வைத்து தூத்துக்குடி, கூட்டாம்புளி, புதுக்கோட்டை, சாயர்புரம், பெருங்குளம், சிவகளை, திருவைகுண்டம் மற்றும் ஏரல் ஆகியவை போக்குவரத்து தொடர்புள்ள பகுதிகளாக விளங்கி வருகிறது. பிரதான தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக இவ்வழித்தடத்தில் போக்குவரத்துகள் நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி என கல்விக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் கூட இயக்கப்படும் அரசு பேருந்துகள் அவ்வப்போது காணாமல் போய்விடுகிறது. குறிப்பாக தனியார் பேருந்துகளிடம் போட்டி போட்டு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நீண்ட காலம் நீடிப்பதில்லை என்பதை பார்க்க முடிகிறது.  

அந்த வகையில்தான் திருவைகுண்டம், சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி இடையே இயக்கப்படும் தடம் எண் : 578 என்கிற பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாக திருவைகுண்டம் டெப்போவில் இருந்து இயக்கப்படும் இப்பேருந்தின் டிஜிட்டல் போர்டில் 578 என்கிற எண் இதுவரை 
வருவதில்லை. இதற்கு தரமான, நிரந்தரமான பேருந்து ஒதுக்கப்படவில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரைகுறையாக இயக்கப்படுவதும் மற்ற நாட்களில் விட்டு விட்டு இயக்கப்படுவதுமாக இருந்த இந்த பேருந்து கடந்த சில நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் லயன், ஆர்.பி.எஸ், சரோஜ்செல்வம் போன்ற தனியார் பேருந்துகளில் மக்கள் தொங்கி கொண்டு போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியாருக்கு முன்பாக செல்லும் பேருந்தை அதிகாரிகள் எதற்காக நிறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே மிகவும் அவசியமான இந்த பேருந்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

திருவைகுண்டம், சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி, மாசார்பட்டி,இருக்கன்குடி,சாத்தூர் இடையே இயக்கப்படும் திருவைகுண்டம்  டெப்போவை சேர்ந்த தடம் எண் 147சி என்கிற பேருந்து அதிகாலையில் திருவைகுண்டத்தில் கிளம்பி வழித்தடத்தில் இயக்கப்படுவது வழக்கம். சமீபகாலமாக இந்த பேருந்து வழித்தடத்தில் காலதாமதமாக வருகிறது. இந்த பேருந்திற்கு பிறகு திருவைகுண்டத்தில் கிளம்பி வரும் 147 ஏ என்கிற பேருந்தும் 147 சி என்கிற இந்த பேருந்தும் முன்னும் பின்னுமாக வழித்தடத்தில் வருகிறது. 147சி பேருந்து காலதாமதம் ஆவதால் அதனை நம்பி காத்திருக்கும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தடம் எண் 147 சி என்கிற அரசு பேருந்தை உரிய நேரத்தில் திருவைகுண்டத்தில் கிளம்பி சரியான நேரத்தில் வழித்தடத்தில் இயங்கும்படி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

இதேபோல் தூத்துக்குடி, சாயர்புரம், பெருங்குளம், சிவகளை இடையே இயக்கப்படும் தூத்துக்குடி நகர டெப்போவை சேர்ந்த 52பி என்கிற பேருந்தும் முறையாக, தொடர்ந்து இயக்கபடுவதில்லை. திடீரென வருகிறது, திடீரென காணாமல் போய்விடுகிறது. தனியார் பேருந்துகளுக்கு இடையே இயக்கப்படும் இந்த பேருந்தை எப்போதும் பழைய பேருந்தாகவேதான் பார்க்க முடிகிறது. சாயர்புரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பயன்படும் வகையில் இயக்கப்படும் இப்பேருந்தை தங்குதடையின்றி தொடர்ந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.