தூத்துக்குடியில் அரசியல் குற்றச்சாட்டு – பாஜக மாவட்ட தலைவர் அறிக்கை

Bjp news

தூத்துக்குடியில் அரசியல் குற்றச்சாட்டு – பாஜக மாவட்ட தலைவர் அறிக்கை

பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது குறித்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி VVD சிக்னல் அருகே, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் உரையாற்றினார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முக சுந்தரம் வெளியிட்டிருந்த மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதில் அளிக்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து அரசியல் மிரட்டல் விடுத்ததாக பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
“‘தெருமுனை பிரச்சாரம்’ என்ற பெயரில் மாநில அரசுத் திட்டங்களை விமர்சிக்கிறார்கள் என கூறுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. பொதுமக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை தடுக்க முடியாததால் அவதூறு பரப்பப்படுகிறது. திமுகவையே குறைகூறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அரசியல் நாடகம் மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அவர்கள் கூட்டம் நடத்த விடமாட்டோம்; களைக்க தொண்டர்களை இறக்குவோம்”, “30 வருடங்களுக்கு முன் நடந்தது மீண்டும் நடக்கலாம்” போன்ற கருத்துகள் பொதுமேடையில் பேசப்பட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் மொழி என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுப் பிரதிநிதிகள் இவ்வாறு மிரட்டல் மொழியில் பேசுவது சட்டம்-ஒழுங்கு நிலைக்கு கேள்விக்குறி எழுப்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாஜக சார்பில், “எங்களுக்கு அராஜக, அடிதடி அல்லது மிரட்டல் அரசியல் தேவையில்லை. ஆதாரங்களுடன் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் ஜனநாயகப் போராட்டமே எங்கள் வழி. மாநகராட்சியில் நடைபெறும் ஒவ்வொரு ஊழலும், முறைகேடும், அலட்சியமும் ஆதாரங்களுடன் மக்கள்முன் வெளிக்கொணரப்படும்” என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பேசியதாக கூறப்படும் கருத்துகள் பொதுஅமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை எனவும், அதிகாரத்தில் இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. அரசியல் வட்டாரங்களில் இச்சம்பவம் தொடர்பாக பரபரப்பு நிலவுகிறது.