ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு புதுக்கோட்டையில் மறியல்
CiTU
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் சூழலில் இருப்பதால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடும் நடவடிக்கை எடுப்பதால் போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் முடிவு செய்து அறிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 20/05/26 அன்று தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 நாட்களுக்குள் தண்ணீர் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். பேச்சு வார்த்தை முடிவுகளை அமுல்படுத்த கோரியும், தொழிற்சாலைக்கு வழங்கப்படும் தண்ணீரை நிறுத்த வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வடகால் விவசாயிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணை தலைவர் டி சீனிவாசன், ஒன்றிய தலைவர் பொன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், சேர்வைகாரன்மடம் கிளை நிர்வாகிகள் அருணாசலமணி, சரவணன், சிவத்தையாபுரம் சங்கர், அருணாசலம், கோவங்காடு சம்பத் சாமுவேல், சிவஞானபுரம் ஜெயபால், சிதம்பரநகர் வரலட்சுமி,முத்துசெல்வி, மல்லிகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
nadunilai.com