தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் வரும் 17ம் தேதி மிக கனமழை பெய்யும் - ஆரஞ்சு நிற எச்சரிக்கை
Rain News
தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் வரும் 17ம் தேதி மிக கனமழை பெய்யும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இடங்களில் இருக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் நாளை மறுநாள் (17ம் தேதி) வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம். மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
nadunilai.com