அனிதா ராதாகிருஷ்ணனை சுழற்றியடிக்கும் தூத்துக்குடி தவெக, காங்கிரஸ்
Dmk - Tvk, cong
மேடையேறினாலே எதாவது வில்லங்கமா பேசி பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்கி பாஸ் மார்க் வாங்கிவிட வேண்டும் என்று வழக்கமாக நினைப்பது வில்லங்க பேச்சாளர்கள்தான். ஆனால் இப்போது முக்கிய பதவியில் இருப்பவர்கள் அந்த வகையில் பேசி வாங்கி கட்டிவிடுகின்றனர். அப்படித்தான் காங்கிரஸ் மற்றும் தவெகவினரின் விமர்சனத்திற்குள் சிக்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூர் தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற பெருமை விளம்பரத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிதாராதாகிருஷ்ணன். சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் இந்த முறை அவரது வெற்றி எளிதாக அமைந்துவிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது தவெக வேட்பாளர் முருகனோடு முட்டி மோதி கடைசியில் காயல்பட்டினம் ஏரியா ஓட்டுகள் கை கொடுக்க, சுமார் 5 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஜஸ்ட் மார்க்கில் பாஸ் ஆன மனநிலையில் இருக்கும் அவர், தலைமையின் கெடுபிடி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் இருந்து வருகிறார். திமுக தலைமை முறையாய தேர்தல் வேலை செய்யாமல் பின் தங்கியவர்கள், முறைகேடு செய்தவர்கள் போன்ற லிஸ்ட்டை கையில் எடுத்து வருகிறது. நிறையபேர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் நிலை இருப்பதாக சொல்கிறார்கள். அதனை காப்பாற்ற பலரும் பலவழியில் முயன்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய அனிதாராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியையும், தவெக தலைவரும், முதல்வருமான விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரையும் வறுத்தெடுத்துவிட்டார். இந்த தகவல் திமுக தலைமைக்கு போனதோ இல்லையோ, காங்கிரஸ் காரர்களையும், தவெகவினரையும் தட்டி எழுப்பிவிட்டுவிட்டது.
செய்தியாளர்களை அழைத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அவர்களிடம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அடைந்த படுதோல்வியின் காரணமாக, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் தனது அரசியல் நிதானத்தை இழந்து, விரக்தியான நிலையில் பொது மேடைகளில் கொச்சையாகப் பேசி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியினரை அவர் 'துரோகிகள்' என்று நா கூசாமல் விமர்சிக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் தொட்டே, மத்தியில் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்துவிட்டு, காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தி.மு.க. செய்த துரோகங்கள் என்னென்ன என்பது இந்த ஊருக்கே நன்றாகத் தெரியும். இத்தகைய தி.மு.க.வின் தரம் தாழ்ந்த கொச்சைப் பேச்சுகளும், தலைவர்களின் அகங்காரமுமே தற்பொழுது அந்த இயக்கம் தமிழகத்தில் முழுமையாக அழிந்து போவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரைத் திட்டமிட்டுத் தோற்கடிப்பதற்காக, அ.தி.மு.க.வினருடன் கைகோர்த்துக்கொண்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை டெல்லிக்குத் தூது அனுப்பி, காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி நின்றது இதே தி.மு.க.தான் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
தென் மாநிலங்கள் முழுவதும் தற்பொழுது காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சிகள் மிக கம்பீரமாக அமைந்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் இன்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய சூழலில், 'தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என்று அனிதா ராதாகிருஷ்ணன் பொது மேடையில் ஆபாசமாக முழங்கியுள்ளார்.
எங்கள் உலகளாவிய தலைவர் ராகுல் காந்தியைப் பற்றித் தரக்குறைவாகப் பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை. இதோடு அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் அவர் எல்லையை மீறிப் பேசினால், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி அவர் மீது 'கருப்பு மை' வீசிப் போராட்டங்களை நடத்துவோம்" என்று கொதித்துவிட்டார்.
இதேபோல் தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளைப் பொது மேடையில் மிகவும் அவதூறாகவும், ஒருமையிலும் பேசி வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தவெக மத்திய மாவட்ட இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கா.விஜய் இன்று பரபரப்புப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: "கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வுகளில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் நோக்கோடும், அரசியல் பகைமையை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளார். குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பொதுமேடையில் ஒருமையில் பேசி, மிகக் கேவலமாகவும் அவமரியாதையாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் தனிப்பட்ட கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும், கொளத்தூர் தொகுதி மக்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியும் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 'தவெக எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவிற்கு அடித்து விரட்டுவோம்' எனத் தொண்டர்களுக்கு பகிரங்கமாக வன்முறைக்குத் தூண்டுதல் விடுத்துள்ளார். எனவே, பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த முயலும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாகக் குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் தகுந்த தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது.
ஆக காங்கிரஸ் கட்சிகாரர்களும், தவெகவினரும் முன்னாள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை சுழற்றியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
nadunilai.com