மாநாடு, உண்ணாவிரதம், பாதையாத்திரை - பரபரப்பாகி கிடக்கும் தமிழக அரசியல்
Tamil Nadu Political
தனக்கு முன்னே எழுந்து வரும் அலையை எதிர்கொள்ள தனக்குத்தானே திடப்படுத்துக்கொள்ளும் முயற்சி போல் இருக்கிறது நமது தமிழக அரசியல் கட்சிகளின் இப்போதைய நிலையை பார்க்கும்போது.
இந்தியாவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரயிருக்கிறது. அதனை எதிர்கொள்ள தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போதுள்ள மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சிகள் அணிசேரும் வேலையில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் ஆளும் திமுக, அதிமுக மூலமோ, பாஜக மூலமோ பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் கிடைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. குறிப்பாக பாஜகவை எந்த வகையிலும் தமிழகத்துக்குள் நுழைய விட்டுவிட கூடாது என்று நினைக்கிறது. பழைய தோலை கழட்டிவிட்டு புதிய தோலை சட்டையாக்கி கொள்ளும் பாம்பு போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதனை வெளி உலகத்துக்கு காட்ட இன்று(20.08.2023) மதுரையில் பொன்விழா மாநாடு நடத்துகிறது. அதில் பல லட்சம் அதிமுகவினர் திரண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஏதோ தீண்ட தகாத கட்சி என்பதுபோல் சித்தரித்து காட்டப்பட்ட பாஜக, இப்போது சொந்த ஊருகாரனுக்கு இருக்கும் உரிமையை போல் தமிழக அரசியலை சொந்தம் கொண்டாடி வருகிறது. கிட்டத்தட்ட எதிரிகளை மிரட்டும் அளவிற்கு உருவகம் கொண்டதாக வளர்ந்து வருகிறது. தற்போது அதன் மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதையாத்திரையில் கூடும் கூட்டமே அதற்கு சாட்சி.
அதிமுக மற்றும் பாஜக வை பின்னுக்கு தள்ளுவதோடு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திமுகவும் பல முயற்சிகள் மேற்கொள்கிறது. அதிமுக மாநாடு நடத்தும் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கின்றனர். வேங்கைவயல் தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலக்கிய பிரச்னை, நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர், அவரது சகோதரி தாக்கப்பட்ட விவகாரமெல்லாம் திமுகவுக்கு மைனசாக இருக்கும் வேளையில், கச்சத்தீவு பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை குறித்த விவாதங்கள், அந்த விவகாரங்களை மறக்க செய்திருக்கிறது. அதிமுக மாநாடு குறித்து மக்கள் பேசும் அதே வேளை நீட் விவகாரம் குறித்து மக்கள் பேசும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆக, இன்றைய நாளில் அதிமுகவின் மாநாடு, திமுகவின் உண்ணாவிரதம், பாஜகவின் பாதையாத்திரை என பரபரப்பாகி கிடக்கிறது தமிழக அரசியல் .