மோடி வருகையின் மூலம் தமிழகத்தில் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்து வருகிறது - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
Vanathiseenivasan
தமிழகத்திற்கு மோடி வருவதால் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், கோவை சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பாரத பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது. அதிகமாக 11 மருத்துவ கல்லூரிகள் தென்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் பாதை திட்டம், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பலையை உருவாக்கி 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் பெற்று தரவில்லை. தற்போது பிரதமர் மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த திமுக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. பிரதமர் நாடு முழுவதும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் தமிழகத்தில் அதிகாரம் ஒரு குடும்பத்தின் அடிமையாக உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தல் மேற்கொள்பவர்கள் திமுகவினரோடு எவ்வளவு நெருக்கமாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு என்னென்ன உதவி செய்தனர் என்பதை அனைவருக்கும் தெரிந்ததே. போதைப் பொருட்கள் புழக்கத்தால் தமிழகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக மாறி உள்ளது என்றவர், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலை திட்டம், நீட் தேர்வு என பல திட்டங்களை தடுக்க முயற்சி செய்தது. நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நவோதயா பள்ளியை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல் திமுக தடுத்து வருகிறது.
மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை அவ்வப்போது வழங்கி வருகிறது. முக்கியமாக வளரும் மாநிலமாக உள்ள தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. திமுக மீது குற்றம் சாட்டுவதால் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றால் அதை பற்றி பாஜக ஒருபோதும் கவலைப்படாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை சொல்ல பாஜக தயங்காது. மத்திய அரசுக்கு உரிமையுள்ள உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது எனவே குடியுரிமை சட்ட திருத்தத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்பவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார். அப்படிப்பட்ட பிரதமர் மோடி வருகையின் போது தான் திமுகவினருக்கு தமிழில் பற்றிய பெருமை தெரிகிறது. தமிழகத்தில் திமுகவை வீழ்த்த காட்டுவோம் என்றார்.