சனாதன எதிர்ப்பு பேசாத திமுக மகளிர் உரிமை மாநாடு

DMK

சனாதன எதிர்ப்பு பேசாத திமுக மகளிர் உரிமை மாநாடு

தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் நம்ப ஆரம்பிப்பர், நாளடைவில் ஏற்றுக் கொள்ளவும் செய்வர் என்பது வெள்ளைக்காரர்களின் அரசியல் தந்திரம். அப்படித்தான் இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் எதிர்கட்சிகள். இந்தியா விடுதலை பெற்று பல்வேறு ஆட்சியாளர்கள் மூலம் வளர்ந்து வருகிறது. இதுவரை இருந்தவர்கள், இருப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கின்றனர், உழைத்து வருகின்றனர். 

நாடும், நாட்டு மக்களும் சுவிட்சம் பெறவேண்டும் அதற்கு யார் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அதை திசை திருப்பும் வகையில் பல்வேறு யுக்திகள் மூலம் மக்களை பந்தாடுகின்றனர் அரசியல் கட்சிகள். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எண்ணுவோர் ஆட்சியில் இருப்போரை கடுமையாக சாடுவதும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஆட்சியாளர்கள் எதிர்கட்சிகளை கடுமையாக சாடுவதும் இயல்பு. வாய்ப்பு கிடைத்தால் ஆளனும் கிடைக்காவிட்டால் மக்கள் நன்மைக்காக குரல் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான அரசியல் கட்சிகளுக்கு அழகாக இருக்க முடியும். 

ஆனால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று ஒரு அரசியல் கட்சி சொல்கிறது என்றால் அந்த கட்சிக்கு மக்கள் நலன் முக்கியம் அல்ல அவர்களின் எதிரியின் தோல்வியே முக்கியமாக இருக்கிறது. கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டின் கட்டமைப்பை உருவாக்கினார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போதுள்ள பாஜகவினர் நாட்டின் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். எனவே இவர்களின் வாதம் மக்கள் மத்தியில் ஏற்கப்பட்டு வருகிறது. உலகையே திரும்பி வைத்திருக்கிறது. அதனால் எதிர்கட்சியினர் பாஜக மீது வைக்கும் குற்றசாட்டுக்களே பாஜகவிற்கு அதிக ஓட்டுக்களை வாங்கிதரும் வகையில் அமைகிறது. 

சென்னையில் நடைபெற்றுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தமிழக பெண்கள் மாநாடாக மட்டுமல்ல, இந்திய பெண்களின் மாநாடாக நடந்துள்ளது. இந்த மேடையே இண்டியா கூட்டணியாக காட்சியளிக்கிறது’’ என்று கூட்டணியின் அவசியம் குறித்து பேசிய அவர், பாஜகவை ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும். தமிழகத்தில் ஒன்றுபட்ட கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இதுபோல் நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் இயங்க கூடிய அனைத்து ஜனநாயக கட்சிகளின் வரலாற்று கடமை என்று பேசினார். 

அத்துடன், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே பண்பாடு, ஒரே உணவு என ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். அது நடந்தால் ஒரே மனிதர் என்ற எதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கும்.எனவே பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை முற்றிலும் தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று பேசினார். எந்த இடத்திலும் திராவிட மாடல் என்றோ, சனாதன கோட்பாடு எதிர்ப்பு குறித்தோ பேசவில்லை. ஒரே நாடாக ஒரே கோட்பாடுடன் இருக்க கூடாது பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது வெள்ளக்காரன்தான். அதே கொள்கையைத்தான் இவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள் போல. 

பாஜகவுக்கு எதிராக திரண்ட எதிர்கட்சிகள் சமீப காலமாக அடக்கி வாசிக்கின்றனர். திமுக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசிய சனாதன ஒழிப்பு என்கிற வார்த்தை வடநாட்டில் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவை எதிர்ப்போர் கூட இதை ஆதரிக்கவில்லை என்பதை பார்க்க முடிகிறது. அதனால் இ.ண்.டி.யா என்று உருவாக்கப்பட்ட பாஜக எதிர்ப்பு கூட்டணியில் திமுக இடம்பெறுவதை சில அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை கழட்டிவிட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவைவிட அதிமுகவே பொருத்தமான கூட்டணியாக பல தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. எனவே காங்கிரசுடன் அதிமுக போய்விடுமோ என்கிற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. 

இந்தநிலையில்தான் மகளிர் மாநாடு நடத்தப்பட்டு அதில் இண்டியா கூட்டணியினரை அழைத்து பேசியிருக்கிறார்கள். இதில் சமத்துவம் குறித்தும், பெண்களுக்கான உரிமை குறித்தும் பேசினார்களே தவிர உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ குறித்து யாரும் பேசவில்லை. மன இறுக்கத்தில் இருந்த கூட்டணி கட்சியினரை அழைத்து சமாதானம் செய்து வைத்ததுபோல் ஆகியிருக்கிறது நேற்றைய மகளிர் மாநாடு நிகழ்ச்சிகள். 

இனிமேல் மத்திய பாஜக அரசில் ஜனநாயக கொடுமை இருக்கிறதோ இல்லையோ, அதையே பேசிக் கொண்டே இருப்பார்கள். மாநிலங்களை  தாண்டி இந்தியா என்கிற பாரத தேசத்தை நேசிக்கும் பண்புகளை வளந்துவிட கூடாது என்று அன்றைக்கு வெள்ளக்காரன் கருதினான். அதையே இப்போதுள்ள சில அரசியல் கட்சிகளும் பேசிவருகின்றன எதற்கென்றுதான் தெரியவில்லை.