தைரியத்தில் கனிமொழி - தள்ளாட்டத்தில் மற்றவர்கள்

election news

தைரியத்தில் கனிமொழி - தள்ளாட்டத்தில் மற்றவர்கள்

நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. குறிப்பிட்ட தொகுதியில் இவர்தான் போட்டியிடுவார் என்று திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தன. ஏற்கனவே கூட்டணியை தக்க வைத்திருந்த திமுக, தொகுதி பங்கீட்டையும் எளிதாக கையாண்டது. காங்கிரஸ் கட்சிதான் அதில் கொஞ்சம் தாமதம் காட்டியது. கடைசி நேரம் வரை கூட்டணி அமைக்கும் வேலையில் இருந்தது அதிமுக. கடைசி நேரம்வரை அதிமுகவை எதிர்பார்த்திருந்துவிட்டு கடைசியாக பாமக உள்ளிட்ட சில கட்சிகளை வைத்து கூட்டணி அமைத்தது பாஜக. வழக்கம்போல் தனியாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி முதலிலேயே வேட்பாளர்களை அறிவித்தது. இப்படியாக தமிழகத்தில் 4 முனை போட்டி உருவாகியிருக்கிறது. அனைவரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வலுவான கூட்டணி கொண்ட திமுகவை, பிரிந்து கிடக்கும் அதிமுக, பாஜக தலைமையிலான அணிகள் வெல்லுமா என்கிற கேள்விகள் எழுகின்றன. அதேவேளை, அதிமுக, பாஜக பிரிந்து கிடப்பது திமுகவிற்கு வலுசேர்க்கவும் உதவும், கொள்கை ரீதியாக வலுவை குறைக்கவும் உதவும் என்கிறார்கள். அதாவது மூன்றாக பிரிந்து கிடக்கும்போது தற்போதைய நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பாஜக முந்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி வலுவானது என்கிற பேச்சு பேசப்பட்டு வருவதால் இப்போது தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி போன்றோர் தைரியத்துள் உள்ளனர்.  சித்தாந்தம் ரீதியாக பாஜகவால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சம் திமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது. அதை வைத்தே பாஜக வேட்பாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும்  நம்பிக்கையில் உள்ளனர். அதிக அளவில் உள்ள தொண்டர் பலத்தை மட்டுமே அதிமுக நம்பி களத்தில் நிற்கிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள், வெளியேறியவர்கள் ஏற்படுத்தும் பாதிப்புதான் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதிமுக, பாஜக தலைமையிலான அணிகளுக்கு எதிரான வாக்குகளை திமுக பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையே பெரும்பாலான தொகுதிகளில் திமுக அணி முன்னிலை பெறும் என கணிக்கின்றனர். அப்படித்தான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்று கணக்குபோடுகிறார்கள். பாஜக போட்டியிடுவதற்கு பதிலாக அதன் கூட்டணி கட்சியான த.மா.கா போட்டியிடுவதால் பாஜக வினர் முழு மனதாக வாக்களிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் நம்புகின்றனர். ஆனால் அண்ணாமலையும், பிரதமர் மோடியின் தொடர் பிரசாரங்களும் பாஜகவினரை கூட்டணி கட்சிக்கு ஓட்டு போட வைக்கும் என்கிறார்கள். பாஜக சின்னமான தாமரையாக இருந்தால் திமுக மீதுள்ள வெறுப்பை எளிதில் ஓட்டாக்கியிருக்கலாம். ஆனால் சைக்கிள் சின்னமாக இருப்பதால் அதில் சற்று தயக்கம் இருக்கிறது என்றாலும் பாஜக வின் ஓட்டு வங்கியை உயர்த்த வேண்டும் என்கிற அக்கறை பாஜகவினர் மத்தியில் அழுத்தமாக இருக்கிறது. அதனால் அதிவேகமாகவே பாஜகவினர் வேலை செய்து வருகின்றனர். 

ஆயிரம்தான் இருந்தாலும் வலுவான கூட்டணி உள்ள திமுக வேட்பாளர் கனிமொழியை யாராலும் வெல்ல முடியாது என்று திமுக ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர் மூலம் கிடைக்கும் தேர்தல் நன்மைகளை மக்கள் மத்தியில் அவர்கள் அவ்வப்போது கூறிவருகின்றனர். இதனால் மக்கள் அவரை எதிர்பார்த்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதிமுக வேட்பாளர் நிறைய செலவு செய்ய கூடியவர்தான் என்றாலும் வெற்றி பெறுவோமா என்கிற சந்தேகம் வந்துவிட்டதால் அவர் திடீரென செலவு செய்வதை குறைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. கட்சியினருக்கு மட்டும் தேர்தல் தேவையை நிறைவேற்றுவார் அவ்வளவுதான். அதே அளவில் கூட சைக்கிள் வேட்பாளர் செய்வாரா என்று தெரியவில்லை. இதனால் தேர்தல் லாபத்தோடு மக்களை அனுக இருப்பதாக சொல்லப்படும் கனிமொழிக்கு அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். சித்தாந்த ரீதியில் திமுகவை வீழ்த்த நினைக்கும் பாஜக கூட்டணியால் திமுகவின் வெற்றியின் அளவை குறைக்க முடியும். பாஜகவுக்கென்று குறிப்பிட்ட அளவில் ஓட்டு வங்கியை உயர்த்தி காண்பிக்க முடியும் அவ்வளவுதான். 

தமிழகம் முழுவதும் இதேநிலை இல்லை. திமுகவுக்கு ஆதரவுள்ள தொகுதிகள் இருப்பதுபோல் அதிருப்தி உள்ள தொகுதிகளும் இருக்கிறது. அதனால் அதிமுக, பாஜக மற்றும் இவற்றின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளும் இருக்கிறது. தற்போதைய நிலையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை நோக்கியே காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மற்றவர்களின் அதிரடியான செயல்பாடுகளால் ஒருவேளை, அவர்கள் பக்கமாக காற்றை வீச செய்யலாம்.