சந்துரு தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது - இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Hindu Makkal Katchi

சந்துரு தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது - இந்து மக்கள் கட்சி கோரிக்கை

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் தா.வசந்தகுமார், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது என வலியுறுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் சாதி பிரச்னைகளை களைவதற்காக தங்கள் அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தனி நபர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது அக்குழு தங்களிடம் அளித்துள்ள அறிக்கை முழுவதும் இந்து சமய நம்பிக்கையை சீர் குலைக்கும் வண்ணம் உள்ளது. 

இந்து சமய நம்பிக்கையின் அடையாளமான காப்பு, கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்திட வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்து சமூக மக்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்தி, நம்பிக்கையின் சின்னமாக, சமயத்தின் சின்னமாக கையில் கயிறுகள் கட்டுவதும், விரதகாலங்களில் காப்பு கட்டுவதும் காலம்காலமான நடைமுறை வழக்கமாகும். மேலும் இந்துக்கள் திருநீர், சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்வது நம்பிக்கை சார்ந்த நடைமுறை வழக்கமாகும். பெண்கள் பூ வைத்து கொள்வது வாழ்வியல் நடைமுறையாக உள்ளது. மேலும் பூ, திருநீர், சந்தனம், குங்குமம் திலகம் இடுவது போன்றவை அறிவியல் பூர்வமாகவும் பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது.

நீதிபதி சந்துரு அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிலுவை, ஹிஜாப் போன்றவைகள் பற்றி அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்துக்களின் அடையாளங்களை மட்டும் நீக்க வலியுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஆசிரியர்கள், சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நியமிக்கக் கூடாது என்பது ஏற்புடையது அல்ல. பெரும்பான்மை, சிறுபான்மை என சாதிய ரீதியாக பிரிக்கின்ற வேலையை தனி நபர் விசாரணை குழு செய்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை பாடநூல் கழகம் சார்பில் நடப்பாண்டு வெளியிட்டுள்ள மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைவரும் கைகோர்த்து சம ரீதியாக நிற்பது போன்ற புகைப்படத்தில் இஸ்லாமிய மத அடிப்படை அடையாள சின்னங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. மீதமுற்ற குழந்தைகளின் சமய அடையாள சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே பாடத்திட்டத்தில் இருந்து அப்பகுதியை நீக்கிட வேண்டுகிறோம். 

தமிழக முதல்வர் அவர்களே, மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுப்படுத்தக் கூடிய வகையில், ஓய்வு நீதிபதி சந்துருவின் தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.