மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் அபகரிப்பு? - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
news news
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான 14 குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்புகளுக்கான நிலம் கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வீடுகட்டி குடியிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பலர் வீடு கட்டி குடியிருக்காமல் நிலத்தை அப்படியே போட்டிருந்ததாகவும், அவர்கள் வெளியிடங்களில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதியில் புதிய வீடுகளை கட்டி மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் பலர் குடியேறிவிட்டனர். இதனையறிந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுக்கிடையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுத்து நினைவு படுத்தினர். அவர்களில் ஒருவரான குணசேகர் கூறும்போது, எங்களின் பொருளாதார பற்றாக்குறை, கொரோனா, வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களினால் நாங்கள் வீடு கட்ட முடியாமல் போட்டிருந்தோம். அந்த இடம் நம்ம இடம்தான் எப்படியும் வீடுகட்டுவோம் என்று நினைத்திருந்தோம். எங்கள் பெயரில் பட்டா, பத்திரமெல்லாம் இருக்கிறது. ஆனால் ஊராட்சி மன்றத்தில் கொடுத்த வீட்டுத்தீர்வையை வைத்து சிலர் எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து வீடுகட்டியுள்ளனர். எந்த அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு வீட்டுத்தீர்வை ரசீது கொடுத்தது என்று தெரியவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எங்களுக்குதான் சொந்தம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் எங்களிடம் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இப்படி தவறு செய்திருக்கிறார்கள். இது சட்டப்படி குற்றம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் எங்கள் நிலத்தை மீட்டுத் தருகிறோம் என்று கலெக்டர் கூறியிருந்தார். அதன்படி தேர்தல் முடிந்தவுடன் கலெக்டரை சந்தித்துள்ளோம். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்றார்.