கூட்டாம்புளி வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கடைகள் அடைப்பு, சாலை மறியல்
murder news
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் முன் விரோதம் காரணமாக வாலிபர் வெள்ளக்கண் என்பவரை நேற்று 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளக்கண்ணுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கும் முயற்சி நடந்தது. ஆனால் உறவினர் மறுத்துவிட்டனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரின் உடலை வாங்கமாட்டோம் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வெள்ளக்கண்ணுவின் உடல் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பிரேத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலையும் உறவினர்கள் அப்படியே தெரிவித்து வந்தனர்.
கூட்டாம்புளி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல் போடம்மாள்புரத்திலும் கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடிக் கொண்டிருக்கிறோம், விரைவில் பிடித்துவிடுகிறோம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்காத அப்பகுதியினர் பிரதான புதுக்கோட்டை - ஏரல் இடையிலான கூட்டாம்புளி மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் வெள்ளக்கண்ணுவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வெள்ளக்கண் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு வெள்ளக்கண் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.