உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் : பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
Udayanidhi
திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக புதிய கட்டிடங்கள் திறப்பு, அரசு திட்டங்கள் தொடக்கம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய சாலைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் அருகே உள்ள சத்யா ரிசார்ட்டுக்கு காரில் வந்த துணை முதல்வர், அங்கிருந்து விழா நடைபெறும் தூத்துக்குடி மாநகருக்குள் செல்ல இருந்தார். அந்த நேரத்தில் தூத்துக்குடி –திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பேரிகேட் அமைத்து போக்குவரத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.
ரிசார்ட் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் காலை 9.30 மணியளவில் வேலைக்கு செல்லும் பலரும் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் துணை முதல்வரின் வாகனங்கள் அந்த சாலையை கடந்து சென்றன. அதன் பிறகு மற்ற வாகனங்கள் உடனே பின்தொடராமல் இருக்க சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பத்து நிமிடங்களுக்கு மேலாக சாலை திறக்கப்படாததால் காத்திருந்த வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் பேரிகேட்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
அதேபோல் துணை முதல்வர் நகருக்குள் சென்று திரும்பிய பின்னரும் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் பலர் சிரமத்தை சந்தித்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய தலைவர்கள் வருகை தரும் போது இதுபோன்ற கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், அதனால் பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகவும் நினைவுகூர்ந்தனர்.
பெரிய தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமானவை என்பது உண்மைதான். இருப்பினும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளை சீராக திட்டமிடுவது அவசியம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
nadunilai.com