3,958 பயனாளிகளுக்கு ரூ.110.66 கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
Thoothukudi
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வரவேற்றார். இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 3,958 பயனாளிகளுக்கு ரூ.110.66 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.38.5 கோடி செலவில் திருச்செந்தூரில் மகப்பேறு மற்றும் குழந்தைகள், விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடம், எட்டையபுரம் மற்றும் படர்ந்தபுளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா ரூ.1.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ.4 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் புணரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களில் இந்த விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாநகரில் ரூ.136 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மக்கள் இந்த மருத்துவமனையின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி என்றோலே, துறைமுகம், உப்பளம், விவசாயம், மீன்பிடி தொழில், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகும். தொழில் வளர்ச்சியில் சென்னையோடு போட்டி போட்டு தூத்துக்குடி வளர்ந்து வருகிறது.
மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் பதவிப் பொறுப்பை ஏற்ற போது மகளிர் விடியல் பயணத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டார். இத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை 960 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள் காலையில் வீட்டில் உணவு சாப்பிடாமல் செல்கிறதே என்ற தாய்மார்கள் கவலைப்பட்டனர். இதையறிந்த முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 28 லட்சம் குழந்தைகள் பயன் அடைகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 52 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 17 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். மத்திய அரசு நடத்திய யு.பி.எஸ்.சி தேர்வில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து உள்ளனர். இவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கதாகும். இதுபோல் 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு மாநிலம் முழுவதும் ‘லேப்டாப்’ வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு ‘லேப்டாப்’ வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கோடியே 31 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 லட்சத்து 24 பேர் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். அதே போன்று கோடைகால உதவித்தொகையை கைம்பெண், முதியோர், மாற்றுத்திறனாளிகள் 38 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்து அமையவுள்ள 2.0 திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை நிறுத்த சிலர் முயற்சி செய்தனர். இதை முதல்வரின் தனது சாமர்த்தியத்தால் முறியடித்தார். மேலும் 38 லட்சம் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைப் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடை கால சிறப்பு உதவித் தொகை வழங்கியுள்ளார்.மகளிர் சுயஉதவிக்குழுவை இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பித்தது தி.மு.க. தலைவர் கலைஞர்தான் அதனை ஆரம்பித்து வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களிடம் வேலை கேட்கும் நிலை மாறி, நீங்கள் 4 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளீர்கள். அதனால் ஐ.டி. கம்பெனியினருக்கு கொடுப்பது போன்று, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி, குழு தயாரிக்கும் 25 கிலோ பொருட்களை அரசு பேருந்தில் எந்தவித கட்டணமும் இன்றி எடுத்து சென்று விற்பனை செய்யலாம். இங்கு கடன்உதவி பெற்று உள்ள சகோதரிகள், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற தொழில்முனைவோராக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
2023ம் ஆண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இழந்த 2350 பேருக்கு ரூ.102 கோடிக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 476 பேருக்கு வீடுகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோயிலில் ரூ.306 கோடிக்கு திருப்பணிகள் நடந்துள்ளன. உடன்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ரூ.36 கோடியில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 21 லட்சம் பேருக்கு பட்டா வழங்கபட்டுள்ளது. பட்டா என்பது அரசு கொடுக்கும் சலுகை கிடையாது. அது உங்களின் உரிமை. அந்த உரிமையை அரசு நிலைநாட்டி உள்ளது. மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் இடத்துக்கு வந்து உள்ளனர். மீனவர்களின் கோரிக்கையும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்களில் மீன்பிடி இறங்குதளம், மீன் சந்தைகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி, திருவைகுண்டம் தொகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் பல்வேறு விளையாட்டு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது ரூ.4 கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம் புணரமைக்கப்பட உள்ளது. இந்த கட்டமைப்புகள் அதிகமான விளையாட்டு வீரர்களை தூத்துக்குடியில் இருந்து உருவாக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம் எட்டி இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி ‘ஆல் ரவுண்டர்’ ஆட்சியாக உள்ளது. எனவே இந்த ஆட்சி தொடர நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com