குலசேகரப்பட்டினத்தில் ரூ.900 கோடி மதிப்பில் சிறிய வகை ராக்கெட் ஏவுதளதிட்ட பணிகள் - சுதீர்குமார் தகவல்

Kulasekaran pattinam Rocket news

குலசேகரப்பட்டினத்தில் ரூ.900 கோடி மதிப்பில் சிறிய வகை ராக்கெட் ஏவுதளதிட்ட பணிகள்  - சுதீர்குமார் தகவல்

குலசேகரப்பட்டினத்தில் ரூ.900 கோடி மதிப்பில் சிறிய வகை ராக்கெட் ஏவுதளதிட்ட பணிகள்  - சுதீர்குமார் தகவல் 
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப் பட்டினத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிறிய வகை ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வுமைய இயக்குனர் சுதீர்குமார் தெரிவித்தார். 
தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இரண்டாவது கருத்தரங்கு இன்று(2.8.2023) நடைபெற்றது. கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.   


தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இநோவேஷன்  கூடுதல் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா இணையதளம் வாயிலாக கலந்துகொண்டு சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து  கருத்துரைகளை கூறினார்.  
இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பேசும்போது, தரைவழி, ரயில் வழி, கடல் வழி, ஆகாய வழி, என நான்கு வழி போக்குவரத்து மார்க்கங்கள் கொண்டது சென்னைக்கு அடுத்த மாவட்டம் தூத்துக்குடி தான்.
இந்த மாவட்டம் தொடர்ந்து தொழில்துறையில் வளர்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 400 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக  அதிக நீளம் கொண்ட ஓடுதளம் தூத்துக்குடி விமான நிலையத்தில்  அமைய உள்ளது. இதன் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்றார்.
பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அனைத்து சிறிய வகை செயற்கை கோள் ஏவுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன. இங்கு திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. திட்டபணிகள் விரைவில் தொடங்கப்படும் இன்னும் ஒரு சில வருடங்களில் செயற்கைக்கோள் ஏவப்படும். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலமாக சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதன் மூலமாக பயன்பட முடியும்.  போக்குவரத்து, மின்சாரத்துறை,மின்னணு, உணவு உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் ராக்கெட் ஏவுதளம் மூலமாக பயன்பட முடியும். சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இந்த நிறுவனத்தின் மூலமாக கிடைக்கும்.
ராக்கெட்டை ஏவுதள கட்டுமான பணியின் போதும், கட்டுமான பணிகள் முடிந்த பின்னும் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பயன்பெறும் என்ற கூறிய அவர், ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் வெளியூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி உள் மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு தேவையான உற்பத்தி தளவாடங்களை வழங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த தொழில் நிறுவனங்கள் விண்வெளி நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றார்.
மேலும் அவர், லட்சிய திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் விரைவில் தொடங்கும், முதலில் ரோபோக்களை அனுப்பி சோதனை செய்யப்படும், தொடர்ந்து மனிதனை அனுப்பி சோதனை நடைபெறும் என அவர் தெரிவித்தார். 
இதில், இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி துணைத்தலைவர் செலஸ்டின் வில்லவராயர் உள்பட பல்வேறு தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.