ஜாதிவாரி கணக்கெடுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
Dr.krishnasamy

மத்தியரசு அறிவித்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மே தினம் தொழிலாளர்களின் சுரண்டலுக்கு எதிரான தினமாகும். எனவே, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு மதுரையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், வரும் 2026 தேர்தல் குறித்தும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பார்வையோடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிக்கு முடிவுக்கு வரவேண்டும். கூட்டணி என்றாலே கூட்டணி ஆட்சி என்பது குறித்து அனைத்து கட்சியினருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எனவே, இந்த கொள்கையை முன்னெடுத்து இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ளோம்.வரும் 31ம் தேதி வரை இப்பணி நடைபெறும். தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்தியரசு அறிவித்துள்ளது. இதில், எங்களுக்கு எந்தவிதத்திலும் உடன்பாடு இல்லை. இது பிற்போக்குத் தனமான ஒன்றாகும். சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலின்படி இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது மிக பெரிய ஆபத்தில் முடியும். ஒவ்வொரு ஜாதியிலும் சுமார் 100 உட்பிரிவுகள் உள்ளன. இவ்வாறு இருக்கையில் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்தமுடியும். மேலும், இந்த கணக்கெடுப்பின் அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும். இது அதிகம் உள்ள ஜாதியினர் குறைவாக உள்ள ஜாதியினரை ஒடுக்கப்படும் நிலை ஏற்படும். இது நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத்தள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். பேட்டியின் போது மாநில பொருளாளர் செல்லத்துரை, வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.