தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
M.K.STALIN
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மலர் கொத்து வழங்கி முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் மதன், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் அமைச்சர்கள் மனோதங்கராஜ், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ராஜா, மேயர்கள் ஜெகன்பெரியசாமி, மகேஷ், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், மைதீன்கான், கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு, பயிற்சி கலெக்டர்கள் புவனேஸ்ராம், மகேந்திரன், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விமான நிலைய வளாகத்தில் திரண்டு “வாழ்க தமிழகம்”, “வாழ்க முதல்வர்” என முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் புறப்பட்டார். அங்கு நடைபெறும் அரசு நலத்திட்ட தொடக்க விழாக்கள், புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு வாகைகுளம் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
nadunilai.com