அதிமுக அறிவைப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய தூத்துக்குடி பாஜகவினர்
THOOTHUKUDI BJP
அதிமுக அறிவைப்பை வரவேற்று தூத்துக்குடி பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்திற்கிடையே அவர், மதுரை மீனாட்சிஅம்மன் குறித்து முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை நாஸ்திகம் பேசியதாகவும், அதனை முத்துராமலிங்கத்தேவர் கண்டித்ததாகவும் பேசினார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் உச்சமாக அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் இவை அனைத்தும் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிமுகவினரும், பாஜகவினரும் விமர்சிக்க துவங்கிவிட்டனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்று மாலை தூத்துக்குடியில் உள்ள பாஜகவினர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளதை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தேசியமும், தெய்வீகமும் தன்னுடைய இரு கண்கள் என்று வாழ்ந்த முத்துராமலிங்கத்தேவரை விமர்சனம் செய்யும் வகையில் பிரச்னையை பெரிதாக்கியதாக கூறி அதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மேற்கு மண்டல தலைவர் சிவகணேஷ், வடக்கு மண்டல தலைவர் சிவராமன், தெற்கு மண்டல தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாஜகவினர் கலந்து கொண்டனர்.