மழை வெள்ள நிவாரண பணிகளில்போது நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டவர்கள் மீனவர்கள்தான் - கனிமொழி எம்.பி புகழாரம்

D.M.K

மழை வெள்ள நிவாரண பணிகளில்போது நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டவர்கள் மீனவர்கள்தான் - கனிமொழி எம்.பி புகழாரம்

மழை வெள்ள பாதிப்பின் போது எவ்வித எதிர்பார்ப்பு இன்றி உணவுகளை கூட மறந்து பணி செய்த மீனவர்கள்தான், மீட்பு பணியில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தனர் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டினார். தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள பாதிப்பின் போது 183 படகுகள், 68 பரிசல்கள் இயக்கப்பட்டு 700 மீனவர்கள் முழுமையாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பாராட்டு விழா தூத்துக்குடியில் நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்பிடித்துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் விஜயராகவன் வரவேற்றார்.  

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கனிமொழி எம்.பி பேசியதாவது : மீனவர்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்காக எனது முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் உதவிகரம் நீட்ட ஓடோடி வந்து பணி செய்துள்ளீர்கள். மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கருத்தில் கொண்டு அந்த பணியை செய்வதற்கு புன்னகையோடு வந்ததை எண்ணி  எல்லோரும் மகிழ்கிறோம். மனித நேயம் தலைதோங்கும் வகையில் மனித நேயத்தோடு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பணி செய்த மீனவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது. பெய்த மழை வெள்ளத்தின் போது பல பகுதிகளுக்கு அமைச்சரோடு சென்ற போது சில பகுதிகளில் தண்ணீரின் அளவு அதிக அளவு வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் நாம் செல்லமுடியுமா என்று எண்ணிய போது கயிறு கட்டிக்கொண்டு அதை பிடித்துக்கொண்டும் சில பகுதிகளுக்கும் சென்று மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணி செய்தோம். இந்த காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் கலெக்டர், அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் என அனைவருமே களப்பணியில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி பணியாற்றினோம். எல்லோருக்கும் தேவையான முதல்கட்ட பணியான தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அனைத்து பங்களிப்புகளை மேற்கொண்டோம். இதில் குறிப்பாக அனைவரும் தமிழர்களாக இருந்து விருப்பு வெறுப்புகளை கடந்து பணியாற்றியது தான் மிகப்பெரிய சாதனை. அதிலும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி உணவுகளை கூட உட்கொள்ளாமல் பணி செய்த மீனவர்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்கள் என்றார். 

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடந்த டிசம்பர் மாதம் 17, 18, ஆகிய தேதிகளில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பல பகுதிகளிலிருந்து ஒட்டு மொத்தமாக வந்த ஓரே குரல் படகு வேண்டும். எங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைதான். அதையும் உடனடியாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வந்து பலரையும் மீட்டோம். முதற்கட்டமாக உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். அதிக அளவு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் 3 நாட்களாக மக்கள் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்த காலக்கட்டத்தின் போது சில நாட்கள் இரவு பகல் கண் விழித்துக் கொண்டு பணியாற்றினோம். அப்போது ஓருபகுதியிலிருந்து வயதான தம்பதியினர் வீட்டின் கட்டில் மீது ஏறி அமர்ந்து கொண்டு நாங்கள் போய் சேரக்கூடிய நேரம் எங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் எங்களது குழந்தைகளையும் பேரன் பேத்திகளையும் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். நாங்கள் மெய்சீலிர்த்து போனோம். படிப்படியாக எல்லோரையும் மீட்டோம், காப்பாற்றினோம். அதிலும் கனிமொழி எம்.பி அவர்கள் 10 நாட்களாக கடுமையாக பணி செய்தார்கள். மீனவர்களாகிய நீங்கள் எவ்வளவு சீரமப்பட்டு எங்களோடு ஒத்துழைத்தீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். உங்களது பணிக்கு நான் மிகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அனைவருடைய வாழ்வாதாரமும் பாதுகாக்க பட வேண்டும் என்ற அடிப்படையில் தென்தமிழகத்தில் எதிர்பாராமல் பெய்த மழையின் போது ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டதை மறக்க முடியாது. அதற்கான பல்வேறு வகையில் உங்களுக்கு தேவையான உதவிகளை தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி வழங்கப்படும். அதில் சேதமான பொருட்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்படும். இதில் சிறப்பாக பணியாற்றிய எம்.பி, அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர், அதிகாரிகள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். உங்களது கோரிக்கைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும். சென்னை மிக்ஜாம் புயலின் போது பணியாற்றிய மீனவர்களுக்கு சென்னையில் வரும் 24ம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி பேசுகிறார் என்றார்.  

கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, எம்எல்ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு அருட்திரு பென்சிகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  

விழாவில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், ஜோஸ், தமிழ்நாடு நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயஸ், தமிழ்நாடு நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜாபோஸ்ரீகன், அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் வக்கீல் ரகுராமன், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், தலைவர் வேலம்மாள், மகளிர் அணி மெர்சி லினி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான ரெங்கசாமி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ராஜாஸ்டாலின், அமலிநகர் சந்திரன், வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், குமரன், வட்டச்செயலாளர்கள் ராஜாமணி, சுரேஷ், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மீனவர் சங்கத்தை சேர்ந்த பாக்கியராஜ், ஜெகதாபட்டிணம் நகர்மன்ற துணைத்தலைவர் ரவி பெர்னான்டோ, தமிழ்நாடு மாநில மீனவர் நலவாரிய துணை தலைவர் சாஜீதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ராசப்னம் நன்றி கூறினார்.