தூத்துக்குடி கடல்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீன் ’’அரியோசோமா தூத்துக்குடியன்ஸ்’’
Vilaangu
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களிடம் இருந்து கடந்த 2021ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட 40 செ.மீ. மற்றும் 42 செ.மீ. நீளம் கொண்ட இரண்டு முதிர்ந்த பெண் விலாங்கு மீன்களின் மாதிரிகளை மீன் வளக்கல்லூரி ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் சேகரித்து கொச்சியில் உள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பினார். அங்கு ஆராய்ச்சியாளர் அஜித்குமார் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் அனில் மொஹபத்ரா, கதிர்வேல் பாண்டியன், ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதனை ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வகை விலாங்கு மீன் இந்திய நீர்நிலைகளில் உள்ள அனைத்து மீன்களில் இருந்து வேறுபட்டுள்ளதாகவும், கூட்டிணைப்பிலிருந்தும் வேறுபடுகின்றன. இது புதிய இனங்கள் அரியோசோமா மெரோஸ்டிக்மா மற்றும் அரியோசோமா அல்பிமாகுலேட்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என தற்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் கூறுகையில், இந்த வகை மீன்கள் கடலில் 60 மீட்டர் ஆழத்தில் பாறை இடுக்குகளில் வசிக்க கூடியதாகும். இந்த வகை மீன் இது வரை கண்டறியப்படாத புதிய வகையாகும். இனம் தூத்துக்குடியில் இருந்து சேகரிக்கப்பட்டதினால், இதற்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது காங்கிரிட் வகை விலாங்கு மீன்கள் வகையைச் சேர்ந்ததாகும். உலக அளவில் 243வது இனமாக இந்த விலாங்கு மீன் இனம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 32 வகையான விலாங்கு மீன்கள் உள்ளன. தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் தமிழகம் மற்றும் கேரளா கடலோரங்களில் கண்டு பிடித்துள்ள 3வது வகை விலாங்கு மீன் இனமாகும். இந்த விலாங்கு மீன் சாப்பிட உகந்ததா என்று ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.