கணவன் - மனைவி இடையே தகராறு - மறவன்மடத்தில் மாமனாரை அடித்து கொன்ற மருமகன்
Murder
தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் அருகே திரவியபுரம், கிழக்கத்தெருவை சேர்ந்தவர் இருதயமரியான் மகன் இருதயமணி(58). கூலித் தொழிலாளி. இவரது மகள் விண்ணரசிக்கும், தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த்(28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனந்த் குடிபழக்கம் உள்ளவராம். தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி விண்ணரசியிடம் தகராறு செய்வாராம். இதனால் குழந்தையுடன் விண்ணரசி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று இரவு மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறார். அப்போது மாமனாருக்கும், ஆன்ந்த்க்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அப்போது அங்கிருந்து ஆனந்த் சென்றிருக்கிறார்.
வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் இரவு படுத்து தூங்கிய இருதயமணி காலையில் எழுந்து வெளியில் வரவில்லை. எனவே அவரை விண்ணரசி சென்று பார்த்திருக்கிறார். அப்போது அவர் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதயமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடன் மனைவி வராததற்கு மாமனாரே காரணம் என்று கருதி அவரை மருமகனான ஆனந்த் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.