தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது !

Ration Card

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது !

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட சேவைகள் – காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. 

தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப அரசின் பல்வேறு சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தனிநபர் மற்றும் குடும்ப விவரங்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம் உள்ளிட்ட தேவைகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. இதுபோன்ற பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைவதைத் தவிர்த்து, ஒரே இடத்தில் பல்வேறு சேவைகளைப் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடும்ப அட்டை திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் புகைப்படத்தை குடும்ப அட்டையில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகளும் முகாமிலேயே மேற்கொள்ளப்படும். பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களையும் பொதுமக்கள் நேரில் தெரிவித்து தீர்வு காணலாம்.

எனவே, குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியவர்கள், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோருபவர்கள் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகள் உள்ளவர்கள் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.