இலவச திட்டம் இருக்கிறது.. பயன்படுத்த அரசு பஸ் இல்லை.. - தாளமுத்துநகர் பகுதி மக்கள் கவலை

Tnstc News

இலவச திட்டம் இருக்கிறது.. பயன்படுத்த அரசு பஸ் இல்லை.. - தாளமுத்துநகர் பகுதி  மக்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் – பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியமானதாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் கிராமப்புற மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பேருந்து போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிக்க அரசு பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டே, போக்குவரத்து வசதி குறைவாக உள்ள குக்கிராமங்களுக்கும் அரசு பேருந்துகளை இயக்குவதுடன், பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் குடும்பங்களின் போக்குவரத்துச் செலவு குறைந்து, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களுக்கு முறையான பேருந்து வசதி கிடைக்கவில்லை என்றும், ஏற்கெனவே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டு வந்த தற்போதைய ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து, சப்-கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், தாளமுத்துநகர் வழியாகச் சிலுவைப்பட்டிக்கு தடம் எண் 4 அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதேபோல், மாப்பிள்ளையூரணி மற்றும் சவேரியார்புரம் வழியாக முறையே தடம் எண்கள் 12, 12ஏ உள்ளிட்ட பேருந்துகளும் தாளமுத்துநகருக்கு இயக்கப்பட்டது. ஆனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் எதுவுமே தற்போது இயக்கப்படவில்லை, அவற்றுக்குப் பதிலாகத் தனியார் மினி பேருந்துகளே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயணச் சலுகையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது பகுதிகளில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கும், புதிய பேருந்து நிலையத்திற்கும் இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது இயக்கப்படும் பேருந்துகளும் போதிய அளவில் இல்லை. 

தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுவது மட்டும் அப்பகுதி மக்களின் அனைத்துப் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடாது. அரசு பேருந்துகளின் வழித்தடம், இயக்க நேரம், பயணிகள் எண்ணிக்கை மற்றும் மகளிர் இலவசப் பயணத் திட்டத்தின் பயன்பாடு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய பேருந்து வழித்தடங்களுக்கான கோரிக்கை!

எனவே தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, போடம்மாள்புரம், பேய்க்குளம், சம்படி, இடையர்காடு, ஏரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே போதிய பேருந்து போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல், ஆத்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, போடம்மாள்புரம், பேய்க்குளம், சோலைப்புதூர், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி, ஸ்பிக், முள்ளக்காடு, கோவங்காடு, சோலைப்புதூர், சாலை, சாயர்புரம், ஏரல் ஆகிய பகுதிகளுக்கு இடையேயும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூட்டாம்புளி, குலையன்கரிசல், பொட்டல்காடு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய பேருந்து வழித்தடம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இத்தகைய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டால், கிராமப்புற மக்கள் மட்டுமின்றி மாணவர்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவிகள், மருத்துவத் தேவைக்காகப் பயணிப்போர் எனப் பலதரப்பட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.

இலவசப் பயணத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைகிறதா?

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், பேருந்து வசதியே இல்லாத பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஒரு பகுதியில் அரசு பேருந்து இயக்கப்படாமல், தனியார் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டால், அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள் அரசின் இலவசப் பயணத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இலவசப் பயணத் திட்டத்தின் வெற்றியைப் பயனாளிகளின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு மதிப்பிடாமல், பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமானால், முதலில் அவர்களுக்குத் தேவையான அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

போக்குவரத்துத் தேவைகளுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படுமா?

பிரதான சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படுவதையும், நகரப் பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இருப்பதையும் மட்டும் வைத்து மக்களின் அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது. குக்கிராமங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளைத் தனியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாம் நடத்த வேண்டும். அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து பேருந்து வசதி தொடர்பான கோரிக்கைகளைப் பெற வேண்டும்.

ஏற்கெனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்குவது, புதிய வழித்தடங்களை உருவாக்குவது, பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் இயக்க நேரத்தை மாற்றியமைப்பது, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் சேவைகளை வழங்குவது போன்ற கோரிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, சாத்தியமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டும்.

போக்குவரத்து வசதி என்பது வெறும் பயணத்திற்கான ஏற்பாடு மட்டுமல்ல; அது கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடிப்படை வசதியாகும். எனவே, அரசு பேருந்துகள் செல்லும் பகுதிகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், பேருந்துகள் செல்லாத கிராமங்களையும் கண்டறிந்து, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.