திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த தூத்துக்குடி மூத்த நிர்வாகி ஆர்.பால்ராஜ்.!

DMK News

திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த தூத்துக்குடி மூத்த நிர்வாகி ஆர்.பால்ராஜ்.!

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, நீண்ட காலமாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த நிர்வாகி ஆர்.பால்ராஜ், திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தவெக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி.  தூத்துக்குடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளராகவும், கூட்டாம்புளி கிளை செயலாளராகவும் பணியாற்றியுள்ள ஆர்.பால்ராஜ், சுமார் 50 ஆண்டுகளாக திமுகவின் அடிப்படை தொண்டராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்துவைத்த அவர், பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும் கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.பால்ராஜ் கூறுகையில்,

“நான் 18 வயதில் இருந்து திமுகவுக்காக உழைத்து வருகிறேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊருக்குள் திமுக கொடியே ஏற்ற முடியாத நிலை இருந்தபோதும், எங்கள் ஊர் கூட்டாம்புளியில் திமுக கொடியை ஏற்றியவன் நான். தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல், எப்போதும் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், தக்கவைக்கவும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளேன்” என்றார்.

மேலும் அவர்,“தற்போது திமுகவில் பாரம்பரியமாக உழைத்த தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. புதியவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், நீண்ட காலமாக உழைத்த எங்களைப் போன்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அக்கறையுடன் செயல்படும் என்னைப் போன்றவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக,“உழைப்பிற்கு மரியாதை, அங்கீகாரம் மற்றும் தெளிவான கொள்கை கொண்டுள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைவதே சரியான முடிவு என கருதி, திமுகவிலிருந்து விலகினேன். இனி எங்கள் பகுதியில் தவெகவை வளர்ப்பதற்காக முழு முயற்சியுடன் செயல்படுவேன். என்னைப்போன்றவர்களை அலட்சியமாக நடத்தும் திமுகவை அரசியல் ரீதியாக பின்னுக்கு தள்ளுவதே எங்கள் லட்சியம்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் திமுக நிர்வாகியான ஆர்.பால்ராஜின் இந்த விலகலும், தவெகவில் இணைப்பும், தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக திமுகவில் இருந்து சில மூத்த நிர்வாகிகள் விலகுவது, கட்சிக்குள் உள்ள உள்நிலை பிரச்சினைகள் குறித்த கேள்விகளையும் எழுப்பி வருகிறது. அதே நேரத்தில், புதிய அரசியல் இயக்கமாக வளர்ந்து வரும் தமிழக வெற்றி கழகம், அனுபவமிக்க நிர்வாகிகளை இணைத்துக் கொள்வதன் மூலம் தங்களது கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.