உடைந்த முன்பக்க கண்ணாடியுடன் பல மாதமாக இயக்கப்படும் ஸ்ரீவைகுண்டம் - கோவை அரசு பேருந்து

Tnstc

உடைந்த முன்பக்க கண்ணாடியுடன் பல மாதமாக இயக்கப்படும் ஸ்ரீவைகுண்டம் - கோவை அரசு பேருந்து

ஸ்ரீவைகுண்டம் - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் அரசு பேருந்தின்  முன்பக்க கண்ணாடி உடைந்து பல மாதங்கள் ஆகியும் மாற்றப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். உடனே  கண்ணாடியை மாற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக  பணிமனையில் இருந்து கோயம்புத்தூருக்கு காலை ஒரு பேருந்தும், இரவில் ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரவு நேரத்தில் கிளம்பும் கோயம்புத்தூர் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது என்றும், அதனை மாற்றாமல் அப்படியே வைத்து தொடர்ந்து பேருந்து இயக்கப்படுகிறது என்றும், உடைந்த கண்ணாடியுடன் பேருந்து இயக்கப்படும்போது எதிரே வரும் வாகனங்கள் சில நேரங்களில் தெரியாமல் போகும் போது ஓட்டுநர் திடீர் திடீர் என பிரேக் பிடிப்பதை கவனிக்கும் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை இருந்து வருவதாகவும், இதனால் அப்பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும், பேருந்தை இயக்கும் ஓட்டுநருக்கும் சிரமம் ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.  

நூற்றுக்கணக்கில் புதிய பேருந்துகளை வாங்கி இயக்கி வருவதாக  தமிழக அரசு செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும், முக்கியமான தொலை தூர வழித்தடங்களுக்கு கூட பழைய பேருந்துகளை இயக்குவதும், முக்கியமான முன்பக்க கண்ணாடி உடைந்தால் கூட மாதக்கணக்கில் அதை மாற்றாமல் இயக்குவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்குள் இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.  எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள், ஸ்ரீவைகுண்டம் - சிவகளை - சாயர்புரம் - தூத்துக்குடி - மதுரை - கோயம்புத்தூர் இடையே புதிய பேருந்துகளை காலையிலும், இரவிலும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பயணிகள், மாதக்கணக்கில் உடைந்த முன் பக்க கண்ணாடியை மாற்றும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்தான் அதன் மூலமான விளைவுகளுக்கு பொறுப்பாவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.