நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு நினைவு பரிசு - மோகன் சி லாசரஸ் வழங்கினார்

Nalumavadi news

நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு நினைவு பரிசு - மோகன் சி லாசரஸ் வழங்கினார்

நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை கடந்த 2022 ஜூலை 7ம் தேதி முதல் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இங்கு குறைந்த கட்டணத்தில் பிரசவம் பார்க்கப்படுவதால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது ஸ்ரீவைகுண்டம், ஆழ்வை., சாத்தான்குளம், திசையன்விளை, ஆத்தூர், திருச்செந்தூர் போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து பயனடைந்து செல்கின்றனர். 

இந்நிலையில் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி-ரம்யா தம்பதியினருக்கு இந்த மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தை என்பதால் இந்த குழந்தைக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து குழந்தைக்கு தங்க மோதிரமும், பரிசு பொருட்களும் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக புதுவாழ்வு சங்க அறங்காவலரும், பன்னோக்கு மிஷன் மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் அன்புராஜன் வரவேற்றார். மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா வாழ்த்தி பேசினார்.

இதில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள், புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் புதுவாழ்வு சங்க ஊழியர்கள் செய்திருந்தனர்.