மழை நீரை அகற்ற முடியாமல் தவிக்கும் செக்காரக்குடி வடக்கு தெரு மக்கள் - கருணை காட்டுமா அரசுத்துறை?
Sekkarakkudi
தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் செக்காரக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை பெய்வதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளனர். அதேவேளை, செக்காரக்குடி வடக்குத் தெரு மக்கள் பெரும் சிரமத்தில் சிக்கித்தவிக்கின்றனர். சுமார் 200 வீடுகள் உள்ள அந்த பகுதி தெருவில் முறையான சாலை வசதியில்லை. மழை நீர் வடிந்து செல்ல முறையான வடிகால் வசதியும் இல்லை. இதனால் தற்போது பெய்துள்ள மழை நீர் அந்த தெருவில் தேங்கி நிற்கிறது. சகதியும் தண்ணீருமாக உள்ள அதனை அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சியில் தெரியப்படுத்தியும் அதை யாரும் கண்டு கொள்ள வில்லை என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் தண்ணீர் தேங்கி கொசு உருவாகுவதுடன், நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த முருகன் தெரிவித்தார்.