நீட் தேர்வு கேள்வித்தாள் விநியோக விவகாரத்தில் குழப்பப்படும் தூத்துக்குடி மாணவர்களும், பெற்றோரும்
Neet
அறிவியல், இயற்பியல்,வேதியல்,உயிரியியல் என மேல்நிலை பள்ளி பாடத்தை மையமாக வைத்து மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே விதமான தேர்வு முறையில் நடத்தபடும் இத்தேர்வில், லட்சக்கணக்கில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர். இதில் க்யூ.ஆர்.எஸ்.டி, எம்.என்.ஓ .பி உள்ளிட்ட வரிசையின் அடிப்படையில் கேள்வித்தாள்கள் இடம்பெறுகிறது. இது நாடுமுழுவதுமான மேல்நிலை கல்வி சார்ந்த குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒருமாதிரியான கேள்விகள் வெவ்வேறு வரிசைகளில் இடம்பெறுவது வழக்கம். அதுபோல் வெவ்வேறு பெயர்களில் கேள்விகள் இடம்பெறுவது வழக்கம். ஒரே மாதிரியான கேள்விகள்தான் இதில் இடம்பெறும் என்பதில்லை. அதாவது, எந்த மாநிலத்திற்கு, எந்த மாவட்டத்திற்கு எந்த கேள்வித்தாள்கள் என்பதில்லை. ஒரு மாவட்டத்தில் நடைபெறும் வெவ்வேறு தேர்வு மையங்களில், வெவ்வேறு விதமான வரிசையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கலாம். எது எப்படி என்றாலும் அதற்கான பாடதிட்டம் என்பது மேல்நிலை பள்ளி வரையிலானதுதான்.
ஒரே மையத்தில் கூட வெவ்வேறு கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்படலாம் என்பதுபோல் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு கேள்வித்தாள்கள் வெவ்வேறு வரிசை கொண்டதாக இருந்தது. க்யூ.ஆர்.எஸ்.டி என்கிற வரிசைக்கு பதிலாக எம்.என்.ஓ .பி என்கிற வரிசை கொண்ட கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இது தவறில்லை என்பதை அறியாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல்களை மீடியாக்களுக்கு தெரிவித்த அவர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என அரசு அதிகாரிகளிடம் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் கலெக்டரும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இதற்கு பதில் சொல்ல தயாரில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சத்தில் கிளப்பும் கேள்விகளையும், கோரிக்கைகளையும் விசாரித்து விளக்கம் சொல்ல வேண்டிய மீடியாக்களும், பத்திரிக்கைகளும் பரபரப்பு செய்தியாக கருதி இதனை வெளியிட பரபரப்பாகி கிடக்கிறது தூத்துக்குடி நீட் தேர்வு எல்லை.
ஏற்கனவே நீட் தேர்வு முறையை எதிர்த்துவரும் சமூக ஆர்வலர்கள் இதன் உண்மை நிலையை அறிந்தோ அறியாமலோ கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கியிருக்கின்றனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு அர்த்தமற்றது என்று விபரம் அறிந்தவர்கள் கூறிவருகின்றனர். மாணவர்களை பாதிக்கும் அளவிற்கு அங்கு எதுவுமே நடந்துவிடவில்லை. குறிப்பிட்ட பாடங்களில் இருந்து வெவ்வேறு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். ஒரு கேள்வித்தாளில் அதிக கேள்விகள் இருக்கிறது, இன்னொரு கேள்வித்தாளில் குறைந்த எண்ணிக்கையில் கேள்விகள் இருக்கிறது என்பதை கூறி அச்சம் அடையும் மாணவர்களுக்கு விபரம் அறிந்த கல்வியாளர்கள் கூறுவது, கேள்விகள் அதிகம், குறைவு என்று அச்சமடைய வேண்டாம். அதற்கு தக்கவே மதிப்பெண் பகிரப்பட்டிருக்கிறது. ஒரே அளவில்தான் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்கின்றனர்.
நிலமை இப்படி இருக்க, நாம் பரப்புவது சரியானதுதானா என்று தெரிகிறதோ இல்லையோ மீடியாக்கள் ஆச்சர்யமான செய்தியை வெளியிடுவதுபோல் வெளியிட்டு அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சாதாரண மக்கள் அதிர்ச்சியடையலாம், ஊர் உலகத்திற்கு தகவல் சொல்வோர் சரியானதை சொல்ல வேண்டும். இதுபோன்ற பிரச்னை வந்தால் முக்கிய கல்வி அதிகாரிகள், விபரம் அறிந்த கல்வியாளர்களின் கருத்தை கேட்டு அதையும் வெளியிட வேண்டும். இதில் தவறு இருக்கிறது என்று தெரிந்தால் தேர்வு நடத்தும் அதிகார மையத்திடம் விளக்கம் கேட்டு செய்திவெளியிட வேண்டும். அதைவிட்டுவிட்டு நீட் தேர்வை எதிர்க்கும் சிந்தனை உள்ளவர்கள் கிளப்பிவிடும் பீதியை வெளியிடுவதால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தேவையில்லாமல் குழப்படைகின்றனர். இதனை செய்தி ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.