காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்துள்ள 5 முக்கிய முடிவுகள்.!
P.M.News

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ள நிலையில் முதற்கட்டமாக 5 முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பின் தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நம் நாட்டில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் அரசு அப்பட்டமான பொய்யை சொல்லி உள்ளது. பயங்கரவாதத்தை பரப்பும் பாகிஸ்தான் இப்படி பொய் சொல்வது ஒன்றும் புதிது அல்ல. இதனால் பாகிஸ்தனுக்கு பாடம் கற்பிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியான முடிவுகள் எடுத்து வருகிறது. மேலும் அப்பாவிகளை கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து சவூதி அரேபியா பயணத்தை பாதியில் நிறுத்தி நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
- எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. சுமார் 21 கோடி பேர் இந்த ஒப்பந்தம் மூலம் பயன்பெற்று வரும் நிலையில் இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாற உள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாப் மாநிலம் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி (அட்டாரி - வாஹா) உடனடியாக மூடப்படுகிறது. முறையான அனுமதியுடன் இந்த எல்லை வழியாக இருநாடுகள் இடையே மக்கள் சென்று வந்தனர். தற்போது இந்த எல்லை மூடப்படுகிறது. இதனால் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் மே 1ம் தேதிக்கு முன்பாக நாடு திரும்ப வேண்டும்.
- டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ராணுவம், விமானம் மற்றும் கடற்படை உள்ளிட்ட முப்படைகளின் ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அதேபோல் பாகிஸ்தான் தலைநகர். இஸ்லாமாபாத்தில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களும் திரும்ப பெறப்படுகின்றனர்.
- டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க வேண்டும். தற்போது தூதரகத்தில் 55 பேர் உள்ள நிலையில் அதனை 30 என்ற அளவுக்கு குறைக்க வேண்டும். மற்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
- சார்க் அங்க நாடுகளின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப் படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியான சாத் அகமதுவை அழைத்து மத்திய அரசு எடுத்த முடிவுகள் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு தெரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐந்து முடிவுகள் முதற்கட்டமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வரும் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.