மாதக் கணக்கில் வீணா போகிறது ஆற்று தண்ணீர் - கூட்டாம்புளியில் அவலம்

water News

மாதக் கணக்கில் வீணா போகிறது ஆற்று தண்ணீர் - கூட்டாம்புளியில் அவலம்

குடி தண்ணீருக்காக பல கி.மீ தூரம் வரை மக்கள் அலைந்து திரிந்த நிலை மாறியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ தண்ணீர் வீணா போவது மக்களுக்கும் தெரிவதில்லை, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. கூட்டாம்புளி கிராமத்தில் பல மாதங்களாக தண்ணீர் வீணாக போவதை பார்க்கும்போது அப்படித்தான் யோசிக்க முடிகிறது. 

நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வீடுகளுக்கும் குடி தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுவதை ஒரு புறம் பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று அறிஞர்கள் எச்சரிக்கை செய்வதை இன்னொருபுறம் பார்கிறோம். கிடைக்கும் தண்ணீரை பாதுகாக்க வேண்டும், வீணாக்க கூடாது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையோரம் பல மாதங்கள் தண்ணீர் வீணாக போவதையும், அதுவும் மின் சார வாரிய டிரான்ஸ்பார்மரின் அடிபாகத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கிறது என்றால் அலட்சியம் என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும்?.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட கூட்டாம்புளி கிராமம் வழியாக ஆற்று நீர் பைப் லைன் செல்கிறது. இந்த பைப் லைனில் ஓட்டை விழுந்து கடந்த சில மாதங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. மெயின் ரோட்டில் உள்ள மின் வாரிய டிரான்ஸ்பார்மரின் அடிபகுதியில் இருந்துதான் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவலாகும். வெளியேறும் தண்ணீர் சாலையை தாண்டி வீணாக அங்குள்ள காலி நிலத்திற்குள் செல்கிறது. இதனால் டிரான்ஸ்பார்மருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குடிநீர் வடிகால் வாரியமோ, மின் வாரியமோ, உள்ளாட்சி துறையோ எந்த துறையுமே இதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அப்பகுதியில் உள்ளவர்கள் இது குறித்து சம்பந்தபட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்கிறார்கள். எனவே இனியாவது சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.