Men's Asian Champions Trophy | ஹாக்கியுடன் பிரிக்க முடியாத கோவில்பட்டி...!
sports
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டியில் வழங்கப்பட உள்ள கோப்பை தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கடந்த 01.08.23 அன்று சென்னை வந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி போட்டி சென்னையில் மீண்டும் இப்போது நடைபெறுகிறது. இதற்காக ரூ.16 கோடியில் ஹாக்கி விளையாட்டரங்கம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் பார்வையாளர் மாடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு அதனை கடந்த 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹாக்கியுடன் பிரிக்க முடியாத நகரமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளது. 1920 காலகட்டத்தில் தமிழகத்திலேயே முதன் முதலாக இங்குதான் ஹாக்கி கிளப் தொடங்கப்பட்டது. 1940ம் ஆண்டு முதல் அகில இந்திய அளவிலான ஹாக்கி கோப்பை போட்டிகள் ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக கோவில்பட்டியில் தான் நடைபெற்று வருகிறது.
இன்றும் கோவில்பட்டியில் மட்டும் 8 ஹாக்கி விளையாட்டுக்கான கிளப்புகள் உள்ளது. இதில் 800-க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆசியக் கோப்பையில் விளையாடும் அதிகபட்ச வீரர்கள் கோவில்பட்டியில் இருந்து தேர்வானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டுக்கான எக்ஸலன்ஸ் சென்டர் கோவில்பட்டியில் தான் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல் ஹாக்கி வீரர்களுக்கான அரசு விளையாட்டு விடுதியும் கோவில்பட்டியில்தான் உள்ளது.
கடந்த ஆசிய கோப்பையில் கோவில்பட்டியில் இருந்து கார்த்திக் மற்றும் மாரீஸ்வரன் இருவர் விளையாட தேர்வாகி விளையாடியது நினைவு கூரத்தக்கது. இன்று தொடங்கும் ஆசிய ஹாக்கி கோப்பைக்கான போட்டிக்கும் இந்திய அணியில் கோவில்பட்டியில் இருந்து கார்த்திக் விளையாட உள்ளார்.
ஆசிய ஹாக்கி கோப்பை ஜூனியருக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் அஸ்வின் கூறும் போது, “கோவில்பட்டியில் இருந்து அகில இந்திய ஹாக்கி போட்டிகளுக்கு வீரர்கள் அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் மாரீஸ்வரன் மற்றும் கார்த்திக் இருவரும் விளையாடினர். இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் கார்த்திக் மட்டும் விளையாடுகிறார். இந்த போட்டி ஆசிய கோப்பைக்கான போட்டி மட்டுமல்ல. ஆசியக் கோப்பை சாம்பியன்ஸ் அணிக்கான போட்டி. எனவே இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறும்.
ஒருவேளை இதில் இந்திய அணி தோற்றால் ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கான லீக் போட்டியில் பங்கேற்று தேர்வாக வேண்டிய சூழல் ஏற்படும். இன்றைய போட்டியில் கண்டிப்பாக இந்தியா வெற்றி பெறும் என நம்புகிறோம். பாகிஸ்தான் மற்றும் கொரியா அணிகள் நமக்கு சவாலான அணிகளாக இருக்கும். ஒரிசா மாநிலத்திற்கு பிறகு தமிழ்நாடு ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்காக முன் வந்தது பாராட்டுக்குரியது” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “ஹாக்கி போட்டிகளை காண தமிழகம் முழுவதும் இருந்து ஹாக்கி விளையாட்டு மாணவ - மாணவிகளை அழைத்து செல்வது பாராட்டுக்குரிய விஷயம். இது அந்த மாணவ மாணவிகள் மனதில் ஹாக்கி விளையாட்டு குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஆசிய ஹாக்கி போட்டிகளை காண சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி அஸ்வத்ரா கூறும்போது, ''இந்திய அணியின் போட்டியை நேரில் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நானும் ஒரு நாள் இந்திய அணியில் விளையாடுவேன். அதற்கு நான் பார்க்கவுள்ள இப்போட்டி உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.