தூத்துக்குடியில் ராகுல்காந்தி படத்துடன் பிரசாரம் செய்த சுயேட்சை - தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸார்
election news
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல்கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரசாரம் மேற்கொண்ட சுயேட்சைக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் குதித்த சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரே நேற்று இரவு 8 மணியளவில் பிரசார வாகனத்தில் நின்று காட்ப்ரே நோபுள் என்கிற சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரித்தார். அவ்வாகனத்தின் அருகில் அவரது காரும் நிறுத்தப்பட்டிருந்தது.
எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் அச்சாலையில் இந்த வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நின்றதால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அரசு பேருந்துகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவராக வேட்பாளர் அங்கு நின்று பேசிக் கொண்டே இருந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் முனு முனுக்க துவங்கினர். அதனை கவனித்த வேட்பாளர் தரப்பினர் வாகனத்தை சற்று நகர்த்தினர்.
இதுக்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் வேட்பாளர் இருப்பதுபோல் போட்டோ அவ்வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காங்கிரஸார் கவனித்தனர். அது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயக்கொடி, பிரபாகரன் உள்ளிட்ட காங்கிரஸார், பிரசார வாகனத்துக்கு முன்பு நின்று விளக்கம் கேட்டனர். சுயேட்சையாக இருந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் போட்டோவை எப்படி போடலாம் என்று தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், காங்கிரஸாரை சமாதானம் செய்து வைத்து வேட்பாளர் வாகனத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.