சித்திரை பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் - உதவி இயக்குநர் சுரேஷ் தகவல்

Agri

சித்திரை பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் - உதவி இயக்குநர் சுரேஷ் தகவல்

சித்திரை பட்டத்தில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் என தூத்துக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உளுந்து பயிரிட ஏற்ற தருணம் சித்திரை பட்டமாகும். இந்த பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடிக்கு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானதாகும். உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெற தகுந்த உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். கோடை பருவத்திற்கு ஏற்ற வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, வம்பன்-11 ஆகிய ரகங்கள் உகந்தவை ஆகும். விதைத்த 15 நாட்களில் செடிகளை கலைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் நட்டு பராமரிப்பதன் மூலம், செடிகள் நன்கு கிளைத்து அதிக காய்கள் பிடிக்கும். பூக்கள் தோன்றிய உடன் வேர்கள் மூலம் சத்துக்கள் எடுக்கும் தீவிரம் குறைந்து விடும். எனவே போதுமான சத்துக்களை பெற இலைவழி மூலம் டிஏபி 2 சதவீத கரைசல் தெளிக்க வேண்டும். அதாவது ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் கரைசலை துணியால் நன்கு வடிகட்டி காலை அல்லது மாலை வேலைகளில் உளுந்து விதைத்த 25வது மற்றும் 40வது நாளில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வதை தடுப்பதுடன், பயிர்கள் திரட்சியாக மணிகள் பிடித்து கூடுதல் மகசூல் பெறலாம். உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சல் தேமல் நோய் ஒரு வைரஸ் நோயாகும். மஞ்சள் தேமல் நோயிலிருந்து செடிகளை பாதுகாத்திட விதைப்பிற்கு முன் இமிடாகுளோபிரிட் 70 டபில்யூ.எஸ் மருந்தினை 5 மில்லி என்ற அளவில் ஒரு கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதிக பாதிப்பு இருந்தால் ஏக்கருக்கு 60 மில்லி  டைமீத்தோயேட் 30 இ.சி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எல்.எஸ். மருந்தினை 100 லிட்டர் தண்ணீரில் 30-45 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்த உழவியல் முறையாக பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக பறித்து கலைதல் வேண்டும். இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல்ல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.