தூத்துக்குடியில் நடமாடும் உழவர் சந்தை - விவசாயிகளே நேரடி விற்பனையாளர்கள்

Agri News

தூத்துக்குடியில் நடமாடும் உழவர் சந்தை - விவசாயிகளே நேரடி விற்பனையாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 8 நடமாடும் உழவர் சந்தை மின்சார வாகனங்களை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய உதவும் வகையில் விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட உள்ளது. இதற்காக என்.டி.பி.எல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி பங்களிப்புடன், சுமார் ரூ. 36.28 லட்சம் மதிப்பீட்டில் 8 மூன்று சக்கர மின்சார ஆட்டோக்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி தூத்துக்குடி உழவர் சந்தைக்கு ஆறு ஆட்டோக்களும், கோவில்பட்டி உழவர் சந்தைக்கு இரண்டு ஆட்டோக்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில்,  62 வருவாய் கிராமங்கள், கயத்தார்  வட்டாரத்தில், 33 வருவாய் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில், 57 வருவாய் கிராமங்கள், கோவில்பட்டி வட்டாரத்தில் 32 வருவாய் கிராமங்கள் பயனடையும். இந்த மின்சார ஆட்டோக்கள் திட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

அப்போது அவர் கூறியதாவது : இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது தோட்டத்து விளைபொருட்களை நேரடியாக மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். இதனால் நுகர்வோருக்குப் பசுமையான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஒரு விவசாயி நாளொன்றுக்குக் கூடுதலாக ரூ. 1000 வரை வருமானம் ஈட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது. விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

இதில் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், என்.டி.பி.எல் பொது மேலாளர் அரவிந்த்ராஜா, வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுதாமதி, விற்பனைக்குழுச் செயலாளர் எழில் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.