தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக அரசு பேருந்துகள் நிறுத்தம்?- மீண்டும் இயக்க பொது மக்கள் கோரிக்கை

Tntc News

தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக அரசு பேருந்துகள் நிறுத்தம்?- மீண்டும் இயக்க பொது மக்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு கிளம்பி ஒரு பேருந்து சாயர்புரம், ஏரல் வழியாக திருச்செந்தூருக்கு செல்லும்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி, சாயர்புரம், ஏரல்,  திருச்செந்தூர் இடையே இயக்க கூடிய தடம் எண் 218ஏ, தூத்துக்குடி - ஆத்தூர் - திருச்செந்தூர் இடையே இயக்க கூடிய தடம் எண் 353 ஆகிய பேருந்துகளை மீண்டும் அதன் வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனை ஆதாரமாக வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோல் திருச்செந்தூரில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடையே போட்டிகள் இருந்து வருவது வழக்கம். இந்தநிலையில் அரசு பேருந்துகள் சில இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திருச்செந்தூரில் அதிகாலை 5.15 மணிக்கு கிளம்பி தூத்துக்குடி மற்றும் ஏரல், சாயர்புரம் இடையே இயக்கப்படும் தடம் 218ஏ என்கிற பேருந்து தற்போது வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் ஏரல், சாயர்புரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதுபோல் தூத்துக்குடியில் காலை 6.10 மணிக்கு கிளம்பி திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே இயக்கப்படும் தடம் எண் 353 என்கிற பேருந்தும் அதன் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளுக்கிடையே இயக்கப்படும் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே இந்த இரண்டு பேருந்துகளையும் அதன் வழித்தடத்தில் முறையாக இயக்க வேண்டும். அதுபோல் தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்து அதிகாலை 4.45 மணிக்கு கிளம்பி சாயர்புரம், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும்படி செய்ய வேண்டும். திருச்செந்தூரில் இருந்து 218ஏ என்கிற பேருந்து அதன் வழித்தடநேரமான காலை 8.50 மணிக்கு கிளம்பி அதன் வழித்தடமான ஏரல், சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு இயக்க வேண்டும். இப்படி செய்தால், கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல் பகுதி மக்கள் அதிகாலையில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து 8.50 மணிக்கு கிளம்பும் 218ஏ என்கிற பேருந்தில் ஏரல், சாயர்புரம் பகுதிக்கு வந்துவிடலாம். மேலும் தூத்துக்குடி - சாயர்புரம் - ஏரல் - திருச்செந்தூர் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்கப்படும்போது சாயர்புரம், ஏரல் பகுதி பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். 

தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழித்தடம் என்பது பிரதான வழித்தடமாக விளங்கி வரும் வழித்தடமாகும். அப்படிப்பட்ட வழித்தடத்திற்கு தூத்துக்குடியில் இருந்து அதிகாலை அரசு பேருந்து முதலில் கிளம்புவதில்லை. மாறாக 5.05 மணிக்கு தனியார் பேருந்துதான் முதலில் கிளம்பும்படி இருக்கிறது. அதன் பிறகு 5.20 மணிக்கு 52 E என்கிற அரசு பேருந்து ஏரலுக்கும், 5.30 மணிக்கு 143c என்கிற அரசு பேருந்து உவரிக்கும் இருக்கிறது. ஆனால் இந்த பேருந்துகள் அதன் நேரங்களில் சரியாக கிளம்பி வழித்தடத்தில் செல்வதில்லை. 5.05 மணிக்கு கிளம்ப வேண்டிய தனியார் பேருந்து காலம் தாழ்த்தி கிளம்புகிறது. அதனைத் தொடர்ந்து 5.20 மணிக்கு கிளம்ப வேண்டிய 52 E என்கிற அரசு பேருந்து அதன் நேரத்தில் கிளம்புவதாக தெரியவில்லை. மாறாக 143c என்கிற அரசு பேருந்திற்கு பிறகுதான் வழித்தடத்தில் செல்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எதற்காக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

எனவே தூத்துக்குடியில் அதிகாலை 4.45 மணிக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பி சாயர்புரம், ஏரல் வழியாக திருச்செந்தூர் வரை செல்லும்படியும், அங்கிருந்து 218 ஏ என்கிற பேருந்து 8.50 மணிக்கும் கிளம்பும்படியும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.