தூத்துக்குடி அருகே முறையான எச்சரிக்கை, அறிவிப்புகள் இல்லாமல் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது

NH NEWS

தூத்துக்குடி அருகே முறையான எச்சரிக்கை, அறிவிப்புகள் இல்லாமல் அடிக்கடி விபத்துக்கள்  நடக்கிறது

எந்த ஒரு செயலுக்கும் நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் சம்பந்தபட்ட துறையினருக்கு அது நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். அதில் அலட்சியமாக இருந்தாலோ, அறியாமல் இருந்தாலோ விபரீதங்கள் நடந்துவிடுவது இயற்கை. அப்படித்தான் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மங்கலகிரி அருகே எச்சரிக்கை அறிவிப்பு மீதே வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடந்து வருகிறது.  

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் ஆபீஸ், கோரம்பள்ளம், புதுக்கோட்டை மங்கலகிரி விலக்கு உள்பட பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்கள் பாதுகாப்பாக இருந்தாலும் சில இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வரும் நிலை உள்ளது. இதற்கு, வாகன ஓட்டிகளுக்கு தூரத்தில் இருந்து வரும்போதே தெரியும் வகையில் முறையான அறிவிப்பு பலகை அல்லது எச்சரிக்கை பலகை இல்லை என்ற குற்றசாட்டு கூறப்படுகிறது. மேலும் தற்காலிகமாக வாகனங்கள் சென்று வரும் சர்வீஸ் ரோடுகள் கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் வாகன ஓட்டிகள் ஆதங்கம் கொள்கின்றனர். பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், வாகனங்கள் விரைந்து செல்லவும் வழி ஏற்படுத்தி கொடுக்கவே மேம்பாலங்கள் கட்டப்படுகிறது. ஆனால் அதற்கான பணி நடந்து வரும் போது அவர்கள் வைக்கும் எச்சரிக்கை பலகை மீதே வாகங்கள் மோதுகிறது என்றால் அத்துறை சம்பந்தபட்ட அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சியம்தான் அதற்கு காரணம் என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.  

குறிப்பாக புதுக்கோட்டை மங்கலகிரி விலக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் இடத்தில்தான் தற்போது அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. விமானநிலையம் அருகே உள்ள டோல்கேட்டிலிருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் வாகங்களுக்கு சுமார் ஒன்றரை கீலோமீட்டர் தூரத்தில் நடைபெற்று பாலம் அமைக்கும் பணி குறித்து எந்தவித எச்சரிக்கை போர்டும் இல்லை. வாகனங்களை டைவர்சன் செய்யும் இடத்தில்தான் போர்டு, விளக்கெல்லாம் வைத்திருக்கிறார்கள். டோல்கேட்டை தாண்டி வேகமாக கிளம்பும் கார்கள் திடீரென உள்ள டைவர்சனை பார்த்து உஷாராக முன்னர் விபத்தில் சிக்கிவிடுகிறது. அதாவது அதே எச்சரிக்கை அறிவிப்பு பொருட்கள் மீதே மோதிவிடுகிறது. அதில் உள்ள போர்டு, சிமெண்ட் சுவர் போன்றவைகள் வாகனங்களையும், வாகனத்தில் பயணம் செய்வோரையும் சேதப்படுத்திவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் திடீரென டைவர்சனை பார்க்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை அங்கும் இங்குமாக திருப்பி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். புதுக்கோட்டை போலீசாரும் இதை வழக்கமான பணியாக பார்ப்பதாகவே தெரிகிறது. குறிப்பிட்ட இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது, லைட் போடுவது என்பதுபோல் சற்று தூரத்திற்கு முன்னதாகவே எச்சரிக்கை போர்டு, அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வேக தடுப்பான்கள் வைக்கப்பட வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை சம்பந்தபட்டவர்கள் யோசித்ததாக தெரியவில்லை. 

இதனால் இருபுறமும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே புதுக்கோட்டை பாலம் அமைத்த பிறகு நெல்லை மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் எதுவும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பைபாசை தாண்டி, சீறி வரும் வாகனங்களிடமிருந்து தினம்தோறும் தப்பித்து வரும் புதுக்கோட்டை பகுதி மக்கள், மங்கலகிரி அருகே நடைபெற்று வரும் விபத்துக்களை பார்த்து வேதனைபட்டு வருகின்றனர். எனவே புதுக்கோட்டை - வாகைகுளம் இடையே உள்ள டோல்கேட்டில் இருந்து மங்கலகிரி பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதற்கிடையில் சில எச்சரிக்கை போர்டு, அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.