தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு - 5 மையங்களில் 1968 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

Neet

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு - 5 மையங்களில் 1968 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 5 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வை 1968 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவ படிப்புக்கு ஆண்டு தோறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 பேர், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 480 பேர், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 பேர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 பேர், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 பேர் என மொத்தம் 5 தேர்வு மையங்களில் 1968 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தேசிய தேர்வு முகமையால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளவாறு தேர்வு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு முன்னரே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான மதியம் 1.30 மணிக்கு பின்னர் வருகை தரும் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் தேர்வு நடக்கும் அறைக்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வு எழுத வரும்  மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு எளிதில் சென்றடைவதற்கு ஏதுவாக அனைத்து வழித்தடங்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு மையங்களில் இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதுபோல் அனைத்து தேர்வு மையங்களிலும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.