தூத்துக்குடி அமிர்தா வித்யாலயம் பள்ளி வளாகத்தில் வாகனம் விடுவதில் பிரச்னை - மறியல் செய்த பெற்றோர்

Thoothukudi Amirtha school

தூத்துக்குடி அமிர்தா வித்யாலயம் பள்ளி வளாகத்தில் வாகனம் விடுவதில் பிரச்னை - மறியல் செய்த பெற்றோர்

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மறவன்மடம் பகுதியில் அமிர்தா வித்யாலயம் பள்ளி இயங்கி வருகிறது. தரமான கல்வி என்கிற அடிப்படையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவியர் அதில் படித்து வருகின்றனர். பிரதான சாலையோரம் இருந்தாலும், விசாலமான இடவசதியுடன் இருந்தாலும் அங்கே வந்து செல்லும் வாகனங்களை கையாளுவதில் சிக்கல் இருந்து வருகிறதாம். 

பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் தவிர, பெற்றோரே நேரடியாக தங்கள் வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வருவதும் இருக்கிறது. அவ்வாறு வரும் வாகனங்கள் மூலம் இடையூறு இருப்பதாக கருதும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் கொண்டு வரும் வாகனம் பள்ளிக்கு மேற்கு புறத்தில் உள்ள சாலையின் வழியாக மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்று திடீர் உத்தரவு போட்டது. இது பெற்றோர் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறு செல்லும் போது உள்ள தூரம் உள்ளிட்ட பிரச்னைகளை சொல்லி பெற்றோர் மறுத்தனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம், அவர்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. 

இந்தநிலையில் இன்று(10.8.2023)காலை வழக்கம்போல் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோரை வேறு வழியாக வரச் சொன்னார்களாம். அதனை மறுத்த பெற்றோர், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி, புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர், ஐ வே பெட்ரோல் அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் என்று பலரும் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேசி தீர்ப்போம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பெற்றோர் மறியலை கைவிட்டனர். எந்த பள்ளியிலும் பெற்றோர் வாகனங்கள் பள்ளி வளாகத்துக்குள் வருவதில்லை. அதுபோல் எங்கள் பள்ளியிலும் இருக்க விரும்புகிறோம். எனவே பெற்றோர் தங்கள் வாகனங்களை வெளியில் விட்டுவிட்டு உள்ளே வந்து குழந்தைகளை விட்டு, அழைத்து செல்லலாம் என்று நிர்வாகம் கூறிவருகிறது. அனைத்து வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்படும்போது அங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்படலாம். 

இந்த பிரச்னைக்கு தீர்வு, அனைத்து வாகனங்களையும் பள்ளி நிர்வாகம் வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் அல்லது 
மறவன்மடம் முதல் தட்டப்பாறை விலக்கு வரையில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் போது, இதுபோன்ற வாகனங்கள் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்திக் கொள்ளும். யாருக்கும் பிரச்னை கிடையாது. 

அதாவது சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். அதுவரை பள்ளி நிர்வாகம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும். இதுதான் தீர்வாக இருக்க முடியும்.