திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் என்னதான் பிரச்னை?

Dmk - Congress

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் என்னதான் பிரச்னை?

தேர்தல் வரும்போதெல்லாம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதும், அதெல்லாம் கிடையாது என்று திமுக மறுப்பதும் வழக்கம்தான். ஆனாலும் தற்போதுள்ள கூட்டணி பேச்சு வார்த்தையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை காங்கிரஸ் அழுத்தமாகவும், தொடர்ந்தும் கேட்டு கெடுபிடி செய்வதையும், திமுக மறுப்பு தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.  வழக்கம்போல் இல்லாமல் இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புமே சற்று குரலை உயர்த்தி பேசிவருவதில் வேறு எதேனும் காரணம் உண்டோ என்று கூர்ந்து பார்த்தால் வெளியில் தெரியாத, தவிர்க்க முடியாத சில செய்திகள் இருப்பதை கவனிக்க முடியும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் வழக்கம்போல் எந்த கட்சி கூட்டணியிலும் இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும், கூட்டணிக்கு தயாராக இருக்கும் விஜயின் தவெக மற்றொரு அணியாகவும் களத்தில் இறங்க உள்ளது. தேமுதிக, புதியதமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கடைசி நேரத்தில் எந்த கூட்டணியில் இணையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்தநிலையில் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்த முறை எங்களுக்கு ஆட்சியில் பங்குதரவேண்டும் என்று கொடிபிடித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள், திமுக கூட்டணியை விரும்புவதால் அவர்கள் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை கெடுபிடியாக செய்யவில்லை. மாறாக அப்படி கெடுபிடி செய்வோரை சமாதானம் செய்து பார்க்கின்றனர். முடியாத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமையிடம் முறையிட்டு வருகின்றனர். ஆக காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு நிலைபாடுகள் இருக்கிறது. மாணிக்கம்தாகூர் எம்.பி உள்பட பலர் ஆட்சியில் பங்கு கோரிக்கையை கெட்டியாக பிடித்துள்ளனர். மதுரையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீர்மானமாக்கியிருக்கிறார் மாணிக்கம்தாகூர். இதனால் திமுக தலைமை கொதித்து போய் உள்ளது. ஆட்சியில் பங்கு என்று கேட்போரை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நிலை எடுப்போம் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.  

கடந்த சில தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அப்படி இருந்தவர்கள் ஒரே வீட்டிற்குள் உள்ள எலியும், பூனையும் போல் ஆகிவிட்டார்களே எதற்கு என்கிற கேள்வி பெரும்பாலானோருக்கு எழாமல் இல்லை. 

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் சிலர், தமிழ்நாட்டை பொருத்தவரை இப்போது தேர்தலில் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வைத்திருக்க திமுக விரும்புகிறது. அதேவேளை காங்கிரஸ் கேட்கும் ஆட்சியில் பங்கு என்பதை அவர்கள் விரும்பவில்லை. அதுவே பழக்கமாகபோய்விடும் என்று கருதுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நலத்திட்டங்கள் வழங்குவதன் மூலம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று நம்புகிறார்கள். அதனால் காங்கிரசை கூடுதல் சக்திக்கு மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும்போது காங்கிரசுக்கு திமுக வேண்டியது இருப்பதால் அவர்கள் விலகி போகமாட்டார்கள் என்பதும் அவர்களின் பிடிவாதத்திற்கு காரணம். அப்படி காங்கிரஸ் விலகி சென்று தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட கூடாது என்பதுமட்டுமே திமுகவிற்கு அச்சம். தவெக அணி வலுப்பெற்றால் அது திமுகவிற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடும். காங்கிரஸ் கையைவிட்டு போனால் எதிர்காலத்தில் டெல்லி அரசியல் அதோ கதி ஆகிவிடும் என்கிற எண்ணமும் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சியை அவ்வளவு எளிதாக திமுக விட்டுவிடாது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற தைரியம், ஆட்சி அமைத்தபிறகு மத்திய பாஜக ஆட்சியில் திட்டங்களை பெற காங்கிரஸ் தடையாக இருந்துவிட கூடும் என்கிற தொலைநோக்க பார்வைகூட திமுகவின் போனால் போகட்டும் போடா என்கிற அரசியலாக இருக்கலாம். திமுக பக்கம் இருந்து பார்த்தால் இப்படி தெரிவதுபோல், காங்கிரஸ் கட்சி பக்கம் இருந்து பார்க்கும்போது, திமுகவினரின் சனாதன ஒழிப்பு கோஷம் தேசிய அளவில் காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை வடநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வு இல்லை என்பது போன்ற தகவல், அக்கட்சியை திமுக விவகாரத்தில் அலட்சியமாக இருக்க செய்கிறது. கனிமொழி எம்.பி நேரடியாக சென்று ராகுல்காந்தியிடம் பேசிய பிறகு கூட மாணிக்கம்தாகூரின் கோஷம் நிற்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைமையும் திமுகவை ஆழம்பார்க்கிறது என்றுதான் பார்க்க வைக்கிறது. காங்கிரஸ் குற்றம் சொல்வதற்கு வசதியாக காங்கிரஸ் கட்சி கூட்டணி பேசும் குழுவை அமைத்து சுமார் 70 நாட்கள் ஆனபிறகும் கூட திமுக பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் செய்யவே இல்லை. அப்படியானால் திமுகவின் நிலையும் காங்கிரசை ஒதுக்கி வைத்துதான் பார்க்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் அதற்கு கொடுக்கும் சீட் யை கூட்டணிக்குள் வர தயாராக இருக்கும் கட்சிகளுக்கு கொடுத்து கூட்டணியை ரவுண்ட் செய்துவிடலாம் என்று திமுக காத்திருப்பதுபோல் தெரிகிறது.   

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுகவிற்கு வெற்றி எளிதாகலாம். அதனால் சில எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் கட்சியால் பெறமுடியும். அதுவே தவெக வோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், பெரியவர்கள் ஓரமாக வைத்த காங்கிரஸ் கொடியை இளைஞர்கள் கையில் எடுத்து கிராம கிராமமாக கொண்டு செல்ல வாய்ப்பு அமையும். மேலும் தவெகவுடன் கூட்டணி வைத்தால், விஜயை வைத்து கேரளாவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் சாதிக்கலாம் என்று கருதுகிறது. இந்த கணக்கெல்லாம் தாண்டி நமக்கு பதவி வந்தால் போதும் என்று நினைக்கும் சில கதர்களின் கதறலுக்கு தலைமை செவி சாய்த்தால் பழையபடி திமுகவுடனே கூட்டணியில் இருக்கும். அப்போது காங்கிரஸ் தலைமையை மிரட்டிய தோரணையில் இருக்கும் திமுக.   ஆக, இரண்டு தரப்பிற்குமே உள்நோக்கங்கள் இருக்கிறது என்கின்றனர் அவர்கள்.