இந்துக்களின் எழுச்சியை தடுக்கப்பார்க்கிறதா தமிழக அரசு?
Ayothi Ramar
மதவாதம், மதசார்பற்ற அரசியல் என்றெல்லாம் சில அரசியல் கட்சிகள் பேசுவதை தற்போதுள்ள புதிய தலைமுறைகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மதவாதம் என்பதையும், மதசார்பற்ற அரசியல் என்பதையும் இந்து மதத்துக்கு எதிராக மட்டும் பேசுவதையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எந்த ஒரு அமைப்பும், எந்த ஒரு மதத்திற்கும் எதிராக இயங்குவதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கவில்லை. அதேவேளை, எந்த ஒரு அமைப்பும் எந்த ஒரு மதத்தையும் ஏற்பதற்கு அது எதிராகவும் இல்லை. ஆனால் தற்போதைய இந்திய அரசியல் இந்து மதத்துக்கு எதிராக, இந்துமதத்துக்கு ஆதரவாக என்று பிரிந்து கிடக்கிறது. இந்து மதத்துக்கு ஆதரவாக நிற்போரை, இந்து மத்ததுக்கு எதிராக நிற்போர், மதவாதிகள் என்று விமர்சிக்கின்றனர். அப்படி கூறுவோர் மற்ற மதங்களையும் ஆதரிக்காதவர்களாக இருந்தால் பரவாயில்லை. சிறுபான்மையினர் என்கிற பெயரில் மற்ற மதங்களை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அப்படி இருந்து கொண்டு பெரும்பான்மை மதமான இந்துமதத்தை மட்டும் எதிர்க்கின்றனர். இதுதான் அவர்களின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்பதை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர்கள் உணர்வதில்லை.
பொதுவாகவே சாதி, மதம், மொழி, இனம் என்று மக்கள் ஒன்றினைவது எந்தவொரு நாட்டிற்கும் நல்லது இல்லை என்பதை பொதுவான நடுநிலையாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மத மக்கள் பெரும்பாலும் மதமாக ஒன்றிணைவதில்லை. ஆனால் அவர்களின் நல்லெண்ணத்தை சிதைக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் நடத்தும் பிரிவினை அரசியல்களினால் குறிப்பிட்ட அந்த மக்கள் குறிப்பிட்ட அந்த மதத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் இந்து மத மக்கள் ஒன்றிணைந்து பாஜகவை ஆதரிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
நுழையவே முடியாது என்று தடுக்கப்பார்க்கும் தமிழகத்துக்குள் கூட அந்த வகையில்தான் நுழைந்து கொண்டிருக்கிறது பாஜக. அதற்கான ஏற்பாடுகளில் ஒன்றுதான் அயோத்தியில் ராமர் கோவில் விஷேசத்திற்கு தமிழகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவமெல்லாம். இப்படிபட்ட சூழ்நிலையில் அயோத்தி ராமர் குறித்த விளம்பரம் தமிழக மக்கள் மத்தியில் பேசபட்டுவிட கூடாது என்பதற்காக பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் கீர்த்திதான் பெரியது என்கிற அடிப்படையில் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏராளமானோர் முயற்சி செய்தனர். ஆனால் அப்படி நடத்த கூடாது என்று
தமிழக அரசு வாய்மொழியாக தடை விதித்துள்ளது என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது. அதன்படியே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென் திருப்பேரை பெருமாள் கோவிலில் பஜனை பாடுவதற்கு அனுமதிகேட்ட ஒரு பெண்ணிற்கு அனுமதி மறுத்திருக்கிறது ஆழ்வார்திருநகரி போலீஸ். இதன் மூலம் தமிழக அரசு இந்து மக்களின் எழுச்சியை தடுத்துவிடலாம் என நினைக்கிறது என்று பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்ட துவங்கியுள்ளனர்.