மக்களை பிளவுபடுத்துவது திமுகவா?.. பாஜகவா?.. யார் செய்வது தவறு..?

BJP-DMK

மக்களை பிளவுபடுத்துவது திமுகவா?.. பாஜகவா?.. யார் செய்வது தவறு..?

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். தொலை நோக்கு சிந்தனையுள்ளவர்கள் இதனை பொறுப்புடன் பின்பற்றுவர். குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் அதனை பொருட்படுத்தமாட்டார்கள். இந்தநிலையில் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் பிரதமர் உள்பட பாஜகவினர், ’திமுக ஒரு பிரிவினைவாத கட்சி’ என்று திமுக மீது குற்றம் சுமத்துகின்றனர். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட  திமுகவினரோ, பாஜக மக்களை பிளவுபடுத்துக்கிறது என்று பாஜக மீது குற்றம் சுமத்துகின்றனர். இப்படியாக பிரிவினைவாதம் மற்றும் பிளவுபடுத்தல் என்கிற வார்த்தைகள் தேர்தல் களத்தில் சூடேற்றும் கருவியாக இருக்க போகிறது என்றே தெரிகிறது. 

மக்களை பிளவுபடுத்துதல் என்றால் என்ன?, பிரிவினைவாதம் என்றால் என்ன? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட நமது பாரத தேசத்தில் மதம், மொழி, இனம் என பிரிவுகள் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்கள் நடுவே பிளவு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதே பிளவு படுத்தல் என்பதாகும். அதாவது இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், பெரும்பான்மையான இந்து மத மக்களின் ஆதரவு கட்சியாக பாஜக விளங்குகிறது. அக்கட்சியின் முன்னெடுப்புகளால் மற்ற மத மக்கள் பாதிக்கப்படுவர், மற்றவர்களை துன்புறுத்துவார்கள் என்று கருதுவார்கள் என்று தெரிகிறது. அதை வைத்துதான் பாஜகவிற்கு எதிரானவர்கள் அரசியல் செய்கிறார்கள். அந்த வகையில் பாஜகவிற்கு எதிராக மக்களை ஒன்று சேர்க்க பாஜக ஒரு மதவாத கட்சி என்று நீண்ட காலமாக சொல்லி வந்தனர். அதை சொல்லி சொல்லியியே இந்து மதமல்லாத மக்களை ஒன்று சேர்த்து வந்தனர், வருகின்றனர். ஆனால் அதுவே பாஜகவுக்கு எதிரானவர்களுக்கு எதிராக திரும்பியது. இந்திய நாட்டின் பாரம்பரியம், பண்பாடுகளை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக செயல்பட்டு வருவதற்கிடையில், அச்செயலே தவறானது என்பதுபோல் அரசியல் செய்த எதிர்கட்சிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாக கருதப்பட்டது. கூடிவாழ்வதற்கிடையே குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக மட்டுமே ஒரு இயக்கம் செயல்படும் என்றால் அங்கே பிளவு ஏற்பட்டுவிடும் என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய பிளவிற்கு எதிர்கட்சிகளின் அரசியலும் காரணம் என்பதை பார்க்க முடிகிறது. அதாவது பெரும்பான்மை சமூகத்தை ஆதரிப்பது தவறு, சிறுபான்மை சமூகத்தை ஆதரிப்பது சரி என்பது போன்ற எதிர்கட்சிகளின் செயல்பாடுகள், பெரும்பான்மை சமூகத்தை பாஜக பக்கம் திருப்பிவிட்டது. போதாத குறைக்கு உள்நாட்டு கலாச்சாரம், பண்பாடுகளை கேளி கிண்டல் செய்யும் அளவிற்கு சில அரசியல் கட்சிகளின் செயல்பாடு இருந்தது, பாஜகவிற்கு நல்லதாக அமைந்தது. 

இப்போது பாஜகவை பார்த்து கேள்வி கேட்கும், திமுக கூட திராவிட மாடல் என்கிற இன பிரிவை உச்சத்தில் தூக்கிபிடித்துக் கொண்டுதான் அரசியல் செய்கிறது. மதம் குறித்து பிரிப்பது தவறானது என்று வாதிடும் இவர்கள், இனம் குறித்த பிரிவை ஆதரிப்பது மேலும் இவர்களை கீழே தள்ளியிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள முடிகிறது. பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பாஜகவை தமிழகத்துக்குள் நுழைய விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றன. அதற்கு ஒரே நாடு என்று அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்யும் பாஜகவை எதிர்க்கும் இவர்கள், மாநிலத்தை தனியாகவும், தேசிய அளவிலான திட்டங்களை ஏற்க மறுப்பதுமான பிரிவு நிலை கொண்டிருக்கின்றன. இதையும் பிளவு என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும். இதை மனதில் வைத்துதான் மோடி உள்ளிட்ட பாஜகவினர், திமுக ஒரு பிரிவினைவாத கட்சி என்கின்றனர். 

எனவே பாஜக மீது புகார் கூறும்போது திமுக அதன் நிலைப்பாட்டையும்  கருத்தில் கொள்ளவேண்டும். பாஜக மக்களை மத ரீதியாக பிரிக்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ், தமிழ் என்று பேசும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழை கூட முழுமையான வளர்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக கருதும் மக்கள் அதிகரித்து வருவது தமிழ் வளர்ச்சிக்கு ஆபத்து என்பதை திமுகவினர் உணர்வதாக தெரியவில்லை.

எனவே கூடி வாழும் மக்களிடையே எதை சொல்கிறோம் என்று பார்க்கும்போது சொந்த கலாச்சாரம்,பண்பாட்டை பாதுகாக்க முயற்சி செய்வது தவறில்லை. திமுக செய்யும் பிரிவினைவாதம் தவறில்லை என்றால், பாஜக செய்யும் பிளவு நடவடிக்கையும் தவறில்லை. திமுக செய்வது தவறென்றால் பாஜக என்று இரண்டு கட்சிகளும் செய்வது தவறுதான்.