ராகுல்காந்தி பாஸ்போர்ட்டை ரத்து செய்ய பாஜக மனு - இந்தியா குறித்து அவதூறாக பேசியதாக குற்றசாட்டு
BJP NEWS
அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாகப் பேசியதற்காக, ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல், பல்கலை மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியா குறித்தும், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்தும் பல்வேறு தவறான தகவல்களை கூறினார். இவரது பேச்சுக்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மக்களவை சபாநாயகருக்கு பாஜக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் ராகுல் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல் கூறுவது, நாட்டின் சர்வதேச உறவுகளைப் பாதிக்கக்கூடும். இது தேச விரோதச் செயல்.
நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.