தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விரைவில் ஏக போகமாக வளர போகிறது.!
VOC PORT TRUST
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 2026 ம் ஆண்டு மேலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என துறைமுக ஆணைய துணை தலைவர் சுரேஷ் பாபு கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சி ஐ ஐ தூத்துக்குடி தலைவர் செலஸ்டின் வில்லவராயர் வரவேற்றார். கூட்டத்தை தொடங்கி வைத்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுக துணைத்தலைவர் சுரேஷ்பாபு பேசியதாவது :
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பகுதியில் 501 ஏக்கர் நிலத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து 2027-28 ம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கும். அவ்வாறு உற்பத்தியை தொடங்கும் இதன் மூலம் வ உ சி துறைமுகம் பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி கேந்திரமாக உருவாகும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, கடலுக்குள் காற்றாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வருவதன் மூலமாக 2035 ஆம் ஆண்டு தற்போது 1.65 மில்லியன் டிஇயுஎஸ் ஆக உள்ள சரக்கு பெட்டக போக்குவரத்து 2.3 மில்லியன் டிஇயுஎஸ் அளவிற்கு அதிகரிக்கும். துறைமுகத்தில் இந்த ஆண்டு இதுவரை 20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு கடந்த ஆண்டை விட இதே கால கட்டத்தில் 7 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் இந்த துறைமுகத்தில் 42.4 மில்லியன் லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டது. இது 7.3% வளர்ச்சியாகும். இந்த நிதியாண்டு 50 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம், இத்துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் 3 நவீன படுத்தும் பணி 2026 ம் ஆண்டு முடிவடைந்த பின் சரக்கு கையாளும் திறன் மேலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு இணை தலைமை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் கே மேனன் பேசுகையில்,
நாட்டில் கடந்த ஆண்டு ரூ.3300 கோடி அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அதில் அறுபது சதவீதம் கடல் சார் வாணிபத்தால் நடைபெற்றுள்ளது, உலக வர்த்தகம் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சி மேம்பாட்டு பணிகளுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும். சர்வதேச அளவில் நடைபெறும் ஏற்றுமதியில் 10 சதவீதம் தமிழகத்தில் இருந்து நடைபெறுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், உலக ஏற்றுமதியில் 1.5% இந்தியாவில் நடைபெறுகிறது. இதனை அடுத்த ஆண்டு மூன்று புள்ளி மூன்று சதவீதமாக மாற்ற இலக்கு மேற்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
பின்னர் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் ஸ்ரீ வட்ஸ் ராம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
மத்திய, மாநில அரசுகள் நாட்டில் அதிக அளவிலான முதலீட்டை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக ஒற்றை சாளர வசதிக்கான அரசின் வழிகாட்டுதல் அமைப்பு தொழில் தொடங்குவதற்கான 80 சதவீத பணிகளை எளிமையாக முடித்து தருகிறது. ஈசாப் டூயிங் பிசினஸ் இணையதளம் மூலமாக உடனடி ஒப்புதல் அளித்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கு தேவையான போக்குவரத்து மற்றும் நிலங்கள் போதுமான அளவுக்கு கிடைக்கக்கூடிய பகுதியாக தூத்துக்குடி உள்ளது. இங்கு தொழில்களை தொடங்கி ஏற்றுமதியை அதிகரிக்க அரசோடு இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக சேவை மைய இணை இயக்குனர் குருசிகேஷ் ரெட்டி, சி ஐ ஐ தூத்துக்குடி துணைதலைவர் மரிய ஆண்டனி, டிபிஜிடி முதன்மை செயல் அலுவலர் செந்தில்குமார் சுப்பிரமணியன், சி ஐ ஐ முன்னாள் தலைவர்கள் சஞ்சய் குணசிங், துறைமுகம் சார்ந்த வணிகர்கள், வங்கியாளர்கள், பல்வேறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.